மளிகை பொருட்கள் வாங்குவதில் சிக்கனம்
தற்போதைய பொருளாதாரச் சூழலில், எவற்றில் எல்லாம் சிக்கன நடவடிக்கையை கையாள முடியும் என்று திட்டமிடுவது அவசியமானது. ஒவ்வொரு மாதமும் போடும் பட்ஜெட்டில் நம்மால் பணத்தை மிச்சப்படுத்த முடியும் விஷயங்களில், மளிகைப் பொருட்கள் வாங்குவதும் ஒன்று. திட்டமிட்டு சில விஷயங்களை செயல்படுத்தினால், மளிகைப் பொருட்களுக்காக ஒதுக்கும் பணத்தில் சிறு தொகையை நிச்சயம் சேமிக்க முடியும். அதற்கான குறிப்புகள் இங்கே... சத்துள்ள உணவுகளைத் தேர்வு செய்வது பணத்தை மிச்சப்படுத்துவதற்கான சிறந்த வழியாகும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனிகள் போன்றவை சத்துள்ள உணவுகளை விட விலை அதிகமாகவே இருக்கும்.
மளிகைப் பொருட்களை வாங்குவதற்கு முன்பு சிறிது நேரம் செலவழித்து சரியான பட்டியல் தயார் செய்வது முக்கியமானது. இதன் மூலம் தேவையற்ற பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்கலாம். செய்தித்தாள்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளின் இணையதளங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் சலுகைகளை ஆராய்ந்து, அவற்றுக்கேற்ப பொருட்களை வாங்கலாம்.
சமைத்த மற்றும் உடனே சாப்பிட தயாராக இருக்கும் உணவுப் பொருட்களை வாங்குவதை விட, முழு தானியங்களை வாங்கி பயன்படுத்துவது பட்ஜெட்டுக்கு நல்லது.
வீட்டில் தயாரிக்க முடிந்த உணவுப் பொருட்களை, வெளியில் வாங்குவதைத் தவிர்க்கலாம். ஒவ்வொரு பொருளாக வாங்குவதை விட, தேவையானப் பொருட்களை மொத்தமாக வாங்குவதே சிறந்தது. பொருட்களை வாங்குவதற்கு அங்காடிக்கு ஒவ்வொரு முறை செல்லும்போதும், கவர்ச்சிகரமான விளம்பர யுக்திகளால் நம்மை அறியாமல் தேவையற்ற பொருட்களையும் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது.
வீட்டிலேயே வளர்த்து பயன்படுத்த முடிந்த காய்கறிகளை நாமே விளைவிப்பது, பணத்தை மிச்சப்படுத்துவதோடு, ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.
வாரத்தில் இரண்டு முறை குளிர்சாதனப் பெட்டியை முழுவதுமாக பார்த்து அதில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை முதலில் உபயோகப்படுத்துங்கள். உங்களுக்கே தெரியாமல் சில பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களை வைத்து மறந்து விட்டிருக்கலாம்.
பசியாக இருக்கும் போது அங்காடிக்குச் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு உணவு பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவதை விட, நமது அருகில் கிடைக்கும் சத்தான உணவுகளை வாங்குவது சிறந்தது. குளிர்பானங்கள், சத்து பானங்கள், பழச்சாறுகள் ஆகியவற்றை வாங்குவதையும் தவிர்க்க முயலுங்கள்.
அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் போன்றவை விலை மலிவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். அவற்றை அதிகமாக வாங்கி பயன்படுத்தலாம்.
மளிகைப் பொருட்கள் வாங்கும்போது, அவற்றின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை கவனிக்க மறந்து விடாதீர்கள்.
No comments:
Post a Comment