இளைய குழந்தையின் வரவை இனிமையாக்கும் வழிகள் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, July 29, 2022

இளைய குழந்தையின் வரவை இனிமையாக்கும் வழிகள்

இளைய குழந்தையின் வரவை இனிமையாக்கும் வழிகள் குடும்பத்தில் ஏற்கனவே குழந்தைகள் உள்ள நிலையில், புதிதாக மற்றொரு குழந்தை பிறக்கப்போவது பெரியவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அதே சமயம், மூத்த குழந்தைகள் தங்களுக்கு இதுவரை அளிக்கப்பட்ட முக்கியத்துவம் குறைவதாக உணர்வார்கள். அவர்களது மனம் அதை எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை. மனதளவில் ஒதுக்கப்பட்டவர்களாக உணரும் அவர்கள், தங்கள் மீது பெரியவர்களின் கவனத்தை திருப்பும் வகையில் நிறைய குறும்புகளில் ஈடுபடுகிறார்கள். 

இரண்டாவது குழந்தையின் வரவு, வீட்டில் உள்ள முதல் குழந்தையின் மகிழ்ச்சியான உலகத்தில் மாற்றங்களை உருவாக்கும் என்பதை, பெற்றோர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். அந்தச் சூழலில் பெற்றோர் நடந்து கொள்ளும் விதம் பற்றி, குழந்தை உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளின் தொகுப்பை இங்கே பார்ப்போம். இரண்டாவது குழந்தை உருவான ஏழு மாதங்களில், முதல் குழந்தையிடம் தம்பி அல்லது தங்கை வர இருப்பது பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். குழந்தை பிறப்பதற்கு முன்பாக, அதற்கான துணிகள், இதர பொருள்கள் வாங்க கடைக்கு போகும்போது, முதல் குழந்தையை உடன் அழைத்துச் செல்லலாம். 

பிறக்க உள்ள குழந்தையின் ஆடைகளை, அவர்கள் தேர்வு செய்யும்படி சொல்லலாம். பிறக்கப்போகும் குழந்தைக்கான பெயரைக்கூட முதல் குழந்தையே தேர்வு செய்ய சொல்லி பாச உணர்வை உருவாக்கலாம். இரண்டாவது குழந்தை பிறக்க உள்ள சூழலில், மூத்த குழந்தைகள் உளவியல் ரீதியாக தங்கள் மேல் கவனத்தை ஈர்க்க, அவர்கள் குழந்தைப் பருவத்தில் செய்தவற்றை செய்ய முயல்வார்கள். டம்ளரில் பால் அருந்துவதை விட்டு, புட்டியில் அருந்த முயற்சிப்பார்கள். அதிகமாக அடம் பிடித்து அழுவார்கள். இந்தச் சூழலில் பெற்றோர் அவர்களை மென்மையாக கையாண்டு, பிறக்க உள்ள குழந்தை அவர்களுக்கு துணையாக வர இருப்பதை உணர்த்தலாம். 

இளைய குழந்தைக்கு, மூத்த குழந்தைகளே பல விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு பொறுப்புணர்வை வளர்க்கலாம். தாயின் மேடான வயிற்றை குழந்தைகள் தொட்டுப் பார்க்க ஆசைப்படும் சமயங்களில் மென்மையாக அதை தொட அனுமதித்து, பாச உணர்வை விதைக்கலாம். அவர்களுக்கு துணையாக வர உள்ள தம்பி அல்லது தங்கைக்கு, அவர்கள்தான் பாதுகாப்பாகவும், வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். 

கரு உருவான நான்காவது மாதத்தில் இருந்தே மூத்த குழந்தையை 'நீதான் எங்களது செல்லம்' என்று அவ்வப்போது கொஞ்சுவது அவசியம். அவர்களைப் போன்றே ஒரு 'பாப்பா' வர இருப்பதாக அவர்களிடம் சொல்லி, சகோதர பாசத்தை ஏற்படுத்தலாம். பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்லும்போது, மூத்த குழந்தைகளிடம், 'திரும்பி வரும்போது குட்டி பாப்பாவுடன் வருவேன்' என்று கூறிச் செல்வது அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும்.

No comments:

Post a Comment