மத்திய பல்கலைக்கழகங்களில் சேர நடத்தப்படும்
2-ம் கட்ட நுழைவுத்தேர்வுக்கு ‘ஹால்டிக்கெட்' வெளியீடு
தேர்வு நாளை தொடங்குகிறது
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு நுழைவுத்தேர்வு (கியூட்) நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, விருப்பமுள்ள பிற பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளும் இந்த மதிப்பெண்ணை மாணவர் சேர்க்கைக்கு பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. அந்த வகையில் இந்த நுழைவுத்தேர்வுக்கு நாடு முழுவதும் 14 லட்சத்து 90 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருந்தனர்.
அவர்களை 2 கட்டங்களாக பிரித்து நுழைவுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கான தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. இந்த நிலையில் இதற்கான முதல்கட்ட நுழைவுத்தேர்வு கடந்த மாதம் (ஜூலை) 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நாடு முழுவதும் 160 நகரங்களில் 247 மையங்களில் நடந்து முடிந்தது.
இந்த தேர்வை 8 லட்சத்து 10 ஆயிரம் எழுத அழைக்கப்பட்டனர். அதனைத்தொடர்ந்து 2-ம் கட்ட நுழைவுத்தேர்வு நாளை (வியாழக்கிழமை) முதல் 6-ந் தேதி (சனிக்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது. இந்த தேர்வை நாடு முழுவதும் 6 லட்சத்து 80 ஆயிரம் பேர் எழுத இருக்கின்றனர்.
அவர்களுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வு முகமை நேற்று வெளியிட்டு இருக்கிறது. தேர்வர்கள் https://cuet.samarth.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
பல்வேறு நுழைவுத்தேர்வுகள் காரணமாக, இந்த தேர்வை எழுத முடியாமல் போன தேர்வர்களுக்கு வருகிற 12, 13, 14-ந் தேதிகளில் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன. அவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் 6-ந் தேதிக்கு பிறகு வழங்கப்படும். ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் சிக்கல் இருந்தால், தேர்வர்கள் cuet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு செய்தியாக அனுப்பலாம். மேற்கண்ட தகவல் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment