உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது என்று அறிவியல் ஆய்வுகள் கூறுவது என்ன? - துளிர்கல்வி

Latest

Search This Site

Thursday, August 18, 2022

உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது என்று அறிவியல் ஆய்வுகள் கூறுவது என்ன?

 உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரம் எது என்று அறிவியல் ஆய்வுகள் கூறுவது என்ன?

எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தாலும் அது நல்லதுதான். ஆனால், உடற்பயிற்சியால் உண்டாகும் சிறந்த பலனை அடைவதற்கு நேரம் முக்கியம். அதிலும் உடற்பயிற்சி செய்வதற்கான சிறந்த நேரம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடலாம் என்கிறது, அமெரிக்க ஆய்வு ஒன்று. பெண்கள் காலையில் உடற்பயிற்சி செய்யும்போது உடலில் உள்ள அதிக கொழுப்பு கரைவதாகவும், இதுவே ஆண்கள் மாலை நேரத்தில் உடற்பயிற்சி செய்யும்போது நிகழ்வதாகவும் அந்த ஆய்வு முடிவுகளின் வாயிலாக தெரியவந்துள்ளது.

 இந்த தலைப்பில் அறியப்பட்டவற்றில் பெரும்பாலானவை ஆண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்தவை என, ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு பாலினத்திற்கும் வேறுபடும் ஹார்மோன்கள் மற்றும் உறங்கும் நேரம், விழித்திருக்கும் நேரம், உணவு உண்ணும் நேரம் என அனைத்து உடல் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் நம் 'உடல் கடிகாரம்' ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கலாம்.

 நல்ல ஆரோக்கியமான, சுறுசுறுப்பான 30 ஆண்கள் மற்றும் 26 பெண்களிடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் அனைவரும் 25 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள். 12 வாரங்கள் அவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்ட்ரெச்சிங், ஓட்டம், ரெசிஸ்டன்ட் எனப்படும் எதிர்ப்பு பயிற்சி, தசையை வலுவாக்கும் பயிற்சிகள் என, பல்வேறு விதமான உடற்பயிற்சிகளை அவர்கள் மேற்கொள்வதால் ஏற்படும் விளைவுகள் கண்காணிக்கப்பட்டன.
                                                          
                                                                 
 ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களுள் ஒரு குழுவினர் காலை 8:30 மணிக்கு முன்னதாக உடற்பயிற்சி செய்தனர். மற்றொரு குழுவினர் அதே உடற்பயிற்சிகளை மாலை 6 மணி முதல் 8 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் மேற்கொண்டனர். அனைத்து பங்கேற்பாளர்களும் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட குறிப்பிட்ட உணவுமுறையைக் கடைபிடித்தனர். பங்கேற்பாளர்களின் ரத்த அழுத்தம் மற்றும் உடல் கொழுப்பின் அளவை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகாலத்தில் பரிசோதித்து வந்தனர்.

 மேலும், இந்த காலகட்டத்தில் அவர்களின் உடல் நெகிழ்வு தன்மை, பலம், ஏரோபிக் ஆற்றல் ஆகியவையும் பரிசோதிக்கப்பட்டது. இந்த ஆய்வில் பங்கேற்ற அனைவரும் எந்த நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்தாலும் அவர்களுடைய ஒட்டுமொத்த உடல்நலனும் மேம்பட்டுள்ளது. "ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொரு நேரம் சிறந்தது" "உங்களால் எந்த நேரத்தில் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியுமோ, அந்த நேரம்தான் உடற்பயிற்சி செய்ய சிறந்த நேரமாகும். 

உங்களின் நேரத்திற்கு ஏற்ப உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்" என, இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியரும் நியூயார்க்கில் உள்ள ஸ்கிட்மோர் உடல்நலம் மற்றும் மனித உடலியல் அறிவியல் பிரிவின் பேராசிரியருமான டாக்டர் பால் ஆர்செரியோ தெரிவித்தார். எனினும், ஆய்வு முடிவுகளின்படி, வயிற்றுப்பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்க விரும்பும் மற்றும் தங்களின் ரத்த அழுத்தத்தைக் குறைக்க முயலும் பெண்கள் காலையில் உடற்பயிற்சி செய்வதை இலக்காக வைக்க வேண்டும் என்கிறார், டாக்டர் பால். கல்லீரல் உள்ளிட்ட உடல் உள்ளுறுப்புகளை சுற்றியுள்ள வயிற்றுப்பகுதி கொழுப்புகள் ஆபத்தானது என்பதால் இது மிகவும் முக்கியமானது.

 எனினும், உடலின் மேல்பகுதியில் தசை பலத்தை அதிகரிக்க முயற்சிக்கும் பெண்கள் மற்றும் தங்களின் மனநிலை, உட்கொள்ளும் உணவை மேம்படுத்த விரும்பும் பெண்களும் மாலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆண்களுக்கு எந்த நேரம் சிறந்தது? அதேசமயம், ஆய்வில் பங்கேற்ற ஆண்கள் காலை, மாலை என எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்தாலும் அவர்களின் உடல்பலம் அதிகரித்தது. ஆனால், "தங்களின் இதயநலன், வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிசம்) மற்றும் மனநலனை மேம்படுத்த விரும்பும் ஆண்களுக்கு மாலை நேர உடற்பயிற்சி சிறந்ததாக உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது", என டாக்டர் பால் தெரிவித்துள்ளார்.

 மாலை நேர உடற்பயிற்சி வளர்சிதை மாற்ற நலனை மேம்படுத்துவதுடன், உடல் பருமன், இரண்டாம் வகை நீரிழிவு நோய் மற்றும் பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கான ஆபத்துகளையும் குறைக்கிறது. உடற்பயிற்சி செய்யும் நேரத்திற்கு ஆண்கள் மற்றும் பெண்களின் உடல் எதிர்வினையாற்றுவது ஏன் வித்தியாசமாக இருக்கிறது என்பது தெளிவாக இந்த ஆய்வின் வாயிலாக தெரியவரவில்லை. இதுகுறித்து அதிகம் அறிவதற்கு தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

 பெண்களுக்கு அதிகளவில் வயிற்றுப்பகுதியில் கொழுப்புகள் இருப்பதால், அவர்கள் காலையில் அதிகளவிலான கொழுப்பை எரிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே கூறப்பட்டதுபோல உடல் கடிகாரமும் இதற்கு காரணமாக இருக்கலாம். 'ஃப்ரண்டியர்ஸ் இன் பிசியாலஜி' ஆய்விதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு, ஆரோக்கியமான எடையை கொண்டவர்களிடையே மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு அதிக எடை அல்லது உடல் பருமனுடன் இருப்பவர்கள் மத்தியிலும் மேற்கொள்ளப்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். "இந்த ஆய்வின் மூலம் உடல்பருமனுடன் இருப்பவர்கள் பலனடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன," என பால் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment