“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி!” என்று பெண்கள் விடுதலை கும்மி பாட்டில் பாடினார் மகாகவி பாரதியார் அன்று. இன்று தேர்வுகளில் தமிழக மாணவிகள் அடைந்துள்ள வெற்றி, தேர்வு முடிவுகளில் மின்னும் நட்சத்திரமாக ஜொலிக்கும் நிலையில், இந்த பாட்டைப் பாடும்போது இன்றைய பெண்கள், “எட்டு மறிவினில் ஆணைவிட உயர்ந்து விட்டோம் என்று கும்மியடி பெண்ணே கும்மியடி” என பாடுவார்கள், அத்தகைய நிலை உருவாகிவிட்டது.
கடந்த மாதம் 22-ந்தேதி சி.பி.எஸ்.இ.யின் பிளஸ்-2, 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்ச்சி விகிதத்தைப் பார்த்தால், அகில இந்திய அளவிலும் சரி, தமிழ்நாடு அளவிலும் சரி, மாணவர்களைவிட மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கிறது. பிளஸ்-2 தேர்வில், ஒட்டுமொத்த தமிழக தேர்ச்சி விகிதத்தைப் பார்த்தால், அகில இந்தியாவில் தமிழக மாணவ-மாணவிகள் 97.85 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று ஆந்திரா, கேரளா, கர்நாடகத்துக்கு அடுத்து 4-வது இடத்தில் இருக்கிறது.
தமிழகத்தில் மாணவிகள் 98.24 சதவீதமும், மாணவர்கள் 97.52 சதவீதமும் தேறியிருக்கிறார்கள்.
இதுபோல, 10-ம் வகுப்பு தேர்வில் தமிழக மாணவ-மாணவிகள் 99.58 சதவீதம் தேர்ச்சி பெற்று கேரளா, ஆந்திராவுக்கு அடுத்து 3-வது இடத்தில் இருக்கிறார்கள். மாணவிகள் 99.75 சதவீதமும், மாணவர்கள் 99.45 சதவீதமும் தேர்வு பெற்று இருக்கிறார்கள். சென்னையைச் சேர்ந்த அனன்யா பாலாஜி, அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று மொத்தத்தில் 500-க்கு 500 மதிப்பெண் பெற்று பெரும் சாதனை படைத்துள்ளார்.
சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் மட்டுமல்ல, தமிழக கல்வி திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 தேர்விலும் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கிறது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவிகள் 94.38 சதவீதமும், மாணவர்கள் 85.83 சதவீதமும் தேர்ச்சி பெற்றதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, மாணவர்கள் தேர்ச்சி விகிதத்தைவிட, மாணவிகளின் எடுண்ட்ஸ்தேர்ச்சி விகிதம் 8.55 சதவீதம் அதிகமாக இருக்கிறது. இதேபோல, பிளஸ்-2 தேர்விலும் மாணவிகள் 96.32 சதவீதமும், மாணவர்கள் 90.96 சதவீதமும் தேர்ச்சி பெற்று, மாணவர்களைவிட மாணவிகள் 5.36 சதவீதம் பேர் அதிகமாக தேர்வு பெற்று இருக்கிறார்கள்.
இதுபோல, ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவிகளின் எண்ணிக்கை, என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பித்து இருக்கும் மாணவிகளின் எண்ணிக்கை மட்டுமல்லாமல், பல்வேறு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவிகளின் எண்ணிக்கை, இவையெல்லாம் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டேபோவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தந்தை பெரியார் முதல் தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் விரும்பிய பெண்களின் முன்னேற்றத்துக்கான வாசல் இப்போது எடுண்ட்ஸ்விசாலமாக திறந்துவிட்டது. பெண்கள் வேகமாக முன்னேறிவருவது மகிழ்ச்சி அளித்தாலும், மாணவர்கள் தேர்வுகளில் சற்று பின்தங்குவது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
No comments:
Post a Comment