குழந்தை வளர்ப்பு சவால் நிறைந்ததா? - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, August 21, 2022

குழந்தை வளர்ப்பு சவால் நிறைந்ததா?

குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தை, பெற்றோர்கள் முதலில் உணர வேண்டும். அளவுக்கு அதிகமாக கண்டிப்பதும், செல்லம் கொடுப்பதும் கூடாது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் நேரம் செலவிடுவது பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பில் இருக்கும் சவால்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குழந்தைகள் நல மருத்துவர் சுகன்யாவிடம் கேட்டோம். 

''கடந்த காலங்களைக் காட்டிலும் தற்போது குழந்தை வளர்ப்பு கடினமானதாகவும், மன அழுத்தம் தரக்கூடியதாகவும் மாறியுள்ளது. பெரியவர்களிடம் இருந்து கிடைக்கக்கூடிய குழந்தை வளர்ப்பின் நுணுக்கங்கள், தனிக் குடும்ப அமைப்பு முறையால் இந்த தலைமுறையினருக்கு கிடைப்பது இல்லை. டிஜிட்டல் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவதால், பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு இடையே உரையாடல் வெகுவாக குறைந்துள்ளது. குழந்தைகள் அளவுக்கு அதிகமாக டிஜிட்டல் கேட்ஜெட்களை பயன்படுத்தினால் அவர்களின் படைப்பாற்றல் திறன் குறையத் தொடங்கும். 

பொருளாதாரச் சூழல் காரணமாக, ஒரு குடும்பத்தில் பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதாலும் மற்றும் வீட்டிற்கு வந்தும் வேலை செய்யும் நிலை இருப்பதாலும், குழந்தைகளுடன் போதுமான நேரம் செலவழிப்பதில்லை. இது குழந்தைகள் மனதில் பலவீனத்தை உண்டாக்கும். சிறு பிரச்சினையைக்கூட எதிர்கொள்ள பயப்படுவார்கள். பள்ளி மாணவர்கள், மன அழுத்தத்தால் தற்கொலை செய்துகொள்ளும் வேதனையான நிகழ்வுகளுக்கு இவையும் காரணமாகும். குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தை, பெற்றோர்கள் முதலில் உணர வேண்டும். அளவுக்கு அதிகமாக கண்டிப்பதும், செல்லம் கொடுப்பதும் கூடாது. குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் நேரம் செலவிடுவது பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும். 

குழந்தைகளுக்கு சொத்து, செல்வத்தை தருவதை விட, அவர்களை தன்னம்பிக்கையும், சுயமரியாதையும் உள்ளவர்களாக வளர்ப்பதே சிறப்பு வாய்ந்தது. உலகமயமாக்கல் காரணமாக, தற்போதைய உலகம் போட்டி நிறைந்ததாக உள்ளது. இது வருங்காலத்தில் இன்னும் அதிகரிக்கக்கூடும். எனவே, குழந்தைகளின் அன்றாட செயல்பாடுகளை, அவர்களே செய்யும் வகையில் ஊக்குவிக்க வேண்டும். படிப்பு விசயத்தில் அதிக அழுத்தம் தரக்கூடாது. தங்களுக்கு பிடித்தத்தைச் செய்ய அனுமதிக்க வேண்டும். குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும். ஒழுக்கம், நேரம் தவறாமை ஆகியவற்றை கடைப்பிடிக்க வலியுறுத்த வேண்டும். 
நற்பண்புகள் குழந்தைகளை சிறந்த ஆளுமை திறன் கொண்டவர்களாக உருவாக்கும். உடல் அளவிலும், மனதளவிலும் வளர்ச்சி பெற செய்வதற்கு, குழந்தைகளை அதிக நேரம் விளையாட்டில் ஈடுபடுத்துங்கள். உணவு முறைகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பெற்றோர்கள் அவர்களின் சொந்த அனுபவங்களை குழந்தைகளுடன் பகிர வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானவர்கள். அவர்களுக்கான அணுகுமுறையை அவர்களின் பெற்றோர்களே முடிவு செய்ய முடியும். குழந்தைகள் கூறுவதை காது கொடுத்து கேட்க வேண்டும். அவர்களின் யோசனைகளை மதிக்க வேண்டும்'' என்கிறார் மருத்துவர் சுகன்யா.

No comments:

Post a Comment