தொழில்நுட்பத்துடன் கைகோர்க்கும்போது, அழகு பராமரிப்பு எளிதாகவும், அதிக ஆற்றலுடன் மாற்றமும் பெறுகிறது. அந்த வகையில் அழகு பராமரிப்புக்கு உதவும் சில தொழில்நுட்பக் கருவிகள் பற்றிய தொகுப்பு பற்றி பார்க்கலாம். இவை அளவில் சிறியதாகவும், பயன்படுத்துவதற்கு எளிதாகவும், விலை குறைவாகவும் இருப்பதால் அனைவரும் உபயோகிக்க முடியும்.
பேசியல் ஸ்டீமர்:
முகத்தில் இருக்கும் சருமத் துளைகளை நீராவியின் மூலம் பெரிதாக்கி மாசுக்களை நீக்க ஸ்டீமர் உதவும். இந்த ஸ்டீமரில் இருக்கும் பட்டனை அழுத்துவதன் மூலம், சூடான மெல்லிய நீராவித் துகள்கள் சருமத்தில் ஊடுருவி, ஈரப்பதமாக்கி, சருமத் துளைகளில் இருந்து அழுக்கு மற்றும் பிற அசுத்தங்களை அகற்ற உதவுகிறது.
எல்.இ.டி நெயில் லாம்ப்:
நகங்களை அழகாக வளர்த்து, மெனிக்கியூர் செய்து, விரும்பிய நகப்பூச்சை பூசும்போது, அது சரியாக உலராமல் அழிந்து விடும் சூழலை பலரும் எதிர்கொள்வது உண்டு. இதைத் தடுப்பதற்காகவே வந்துள்ளது எல்.இ.டி நெயில் லாம்ப். இது நகப்பூச்சை சில நொடிகளில் உலர வைக்கும். மேலும் இதில் இருக்கும் டைமர் அமைப்பு, ஒரு தொடுதல் மூலம் தானாகவே அணையும் வசதி கொண்டது.
எல்.இ.டி பேஸ் மாஸ்க்:
இந்த பேஸ் மாஸ்க்கை முகத்தில் பொருத்திக் கொண்டால், அதில் இருந்து வெளிவரும் ஒளி அலைக்கற்றைகள் சருமத்தில் ஊடுருவி, சருமப் பராமரிப்புப் பணிகளை செய்கின்றன. உதாரணத்துக்கு இதில் இருந்து வரும் சிவப்பு ஒளி சருமத்துக்கு தேவையான ரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது. நீல ஒளி முகப்பரு மற்றும் சரும சிதைவுகளைக் குறைக்கிறது. வைப்ரேட்டிங் பேசியல் மசாஜ் டூல்: இந்தக் கருவியை சருமத்தில் பயன்படுத்தும்போது, இதில் இருந்து வரும் அதிர்வுடன் கூடிய மெல்லிய அழுத்தம், சருமத்தில் மசாஜ் செய்வதன் பலனைக் கொடுக்கக்கூடியது. அதன் மூலம் தசைகளில் ஏற்படும் வீக்கம், வலி போன்றவை குறைந்து புத்துணர்ச்சி பெறும்.
ஸ்கின்கேர் பிரிட்ஜ்:
லோஷன்கள், கிரீம்கள், வைட்டமின்-சி கொண்ட சீரம்கள், பேசியல் மாஸ்க்குகள் போன்றவற்றை குளிர்ச்சியான நிலையில் வைத்து பத்திரப்படுத்துவது, அவை நீண்ட காலம் நீடிப்பதற்கு உதவும். இதற்கு உங்கள் ஒப்பனை அறையிலேயே வைத்து பராமரிக்கக் கூடிய, சிறிய அளவு குளிர்பதனப் பெட்டி பயன்படும்.
No comments:
Post a Comment