ராமநாதபுரம்: உலகத் தர கல்வி கிராமப்புற அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வேண்டும். இதற்காக அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்தி கல்வி கற்றுக் கொடுக்கிறேன் என்று ஆசிரியர் கே.ராமச்சந்திரன் பெருமிதத்துடன் பேசுகிறார்.
நாடு முழவதும் 46 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியம் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் கே.ராமச்சந்திரன்(40) தமிழகத்தில் இருந்து இவ்விருதுக்கு தேர்வாகி இருக்கும் ஒரே ஆசிரியர்.
கீழாம்பல் அரசு தொடக்கப் பள்ளியில் 13 மாணவர்கள், 17 மாணவிகள் என 30 பேர் படித்து வருகின்றனர். இரு வகுப்பறை கொண்ட இப்பள்ளியில் தனியார் பள்ளியைவிட அனைத்துவசதிகளும் உள்ளன. இங்கு 30 மாணவர்களுக்கும் கரோனா காலத்தில் ஆன்லைன் மூலம் கல்வி கற்கஆசிரியர் ராமச்சந்திரன் 30 கைபேசிகளை வாங்கிக் கொடுத்துள்ளார்.
மேலும், டேப்லெட் மற்றும் மடிக்கணினி பயன்பாடு, பியோனோ வாசிப்பு, தட்டச்சு பயிற்சி, ஓவியம், சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகளும் இங்குள்ள மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தை பசுமையாக வைக்கும் வகையில் மூலிகைத்தோட்டம் அமைத்துள்ளார்.
மாணவர் மனசு பெட்டி!
தோட்டத்தை பராமரிக்க சொட்டுநீர் பாசனம், ஆழ்துளை கிணறு, மழைநீர் சேகரிப்பு திட்டம், மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி ஆகியவற்றையும் ஆசிரியர் தனது சொந்த செலவில் செய்துள்ளார். மாணவர்கள் தங்களது கருத்துகள், குறைகள், கோரிக்கைகளை எழுதி போடும் வகையில் “மாணவர் மனசு” பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது.
பள்ளிவகுப்பறைக்குள் கார்டூன் புகைப்படங்கள், தலைவர்களின் புகைப்படங்கள், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து பாடங்களையும் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் குறிப்புகளை ஓவியங்களாகவும், குறிப்புகளாகவும் வரைந்து வைத்துள்ளார்.
இங்குள்ள வசதிகளை பார்த்து 2021-ல் இப்பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் ராமநாதபுரம் மாவட்டத்திலேயே முதன்முறையாக வழங்கப்பட்டது. ஆசிரியர் ராமச்சந்திரன், கரோனா காலத்தில் மாணவர்களுக்கு கைபேசிகள் வாங்கிக் கொடுத்திருந்தாலும், 2 தன்னார்வலர்களை நியமித்து மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கற்பிக்க செய்தார். பள்ளி மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் உதவியுடன் பனைமர விதைகளை சேகரித்து கண்மாய், குளக்கரைகளில் நடவு செய்தார்.
விருது ரொக்கம் மாணவர்களுக்கே!
இணைய சேவை, இனிய சேவை, இலவச சேவை என்ற முறையில் கீழாம்பல் கிராம மக்களுக்கு பள்ளி நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் ஜெராக்ஸ், சான்றிதழ் விண்ணப்பம், ஆதார் சேவைகளை இலவசமாக வழங்கி வருகிறார். இச்சேவையை செய்து கொடுக்க மாணவர்களுக்குக் கணினி பயிற்சியும் அளித்துள்ளார்.
இது குறித்து ஆசிரியர் கே.ராமச்சந்திரன் கூறுகையில், “கிராமப்புற குழந்தைகளுக்கு உலகத் தரத்தில் கல்வி் கிடைக்க அனைத்து திட்டங்களையும் எம் பள்ளியில் செயல்படுத்தி வருகிறேன். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டம் அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் முதற்கட்டமாக போகலூர் ஒன்றியத்திலும், அடுத்ததாக மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளேன்.
இந்த விருதானது அரசு பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்துக்கு சமர்பிக்கிறேன். இந்தவிருது மூலம் எனக்கு கிடைக்கும் ரூ. 50,000-த்தை ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களின் போதை ஒழிப்பு விழிப்புணர்வுக்காக செலவு செய்ய திட்டமிட்டுள்ளேன். மாணவர்களின் சீருடையை நானும் அணிந்துள்ளேன். இச்சீருடையை எனது வாழ்நாள் முழுவதும் அணிய திட்டமிட்டுள்ளேன்” என்றார்.
ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் நல்லாசிரியர் ராமச்சந்திரனை வாழ்த்துவோம்!
No comments:
Post a Comment