காலத்திற்கேற்றபடி வடிவமைக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ள என்ஜினீயரிங் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வருகிற 18-ந் தேதி வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதிய பாடத்திட்டம்
வேலைவாய்ப்புக்கு ஏற்ப என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க உயர்கல்வித்துறை திட்டமிட்டது. அதன்படி என்ஜினீயரிங் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க நிபுணர் குழுவை அமைத்து அரசு உத்தரவிட்டது.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 10 பேர், கல்வியாளர்கள் 10 பேர், மனிதவள நிபுணர்கள் 10 பேர், என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள பல்வேறு படிப்புகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் 10 பேர் என மொத்தம் 90 பேர் இந்த புதிய குழுவில் இடம்பெற்று இருந்தனர்.
காலத்திற்கேற்றபடி வடிவமைப்பு
இந்த குழுவினர் பல்வேறு கட்டங்களாக கருத்துகளை கேட்டு, அதற்கேற்றபடி தற்போதைய தொழில்நுட்பங்கள், தொழிற்சாலைகளின் வளர்ச்சி, வேலைவாய்ப்புகளுக்கு தேவையான மனிதவளம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சில பரிந்துரைகளை அளித்ததாக கூறப்படுகிறது.
நிபுணர்கள் குழு அளித்த பரிந்துரைகளை கொண்டு புதிய பாடத்திட்டம் காலத்திற்கேற்றபடி வடிவமைக்கப்பட்டு இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் நடந்த அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ் பேசும்போது, ‘புதிய பாடத்திட்டம் மாற்றப்பட்டு, விரைவில் வெளியிடப்பட இருப்பதாக’ தெரிவித்து இருந்தார்.
18-ந் தேதி வெளியிட திட்டம்
அதன்படி, புதிய பாடத்திட்டம் வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட உள்ளதாகவும், அதனைத்தொடர்ந்து வருகிற 18-ந் தேதி வெளியிடப்பட இருப்பதாகவும் அண்ணா பல்கலைக்கழக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
அவ்வாறு வெளியிடப்படும் புதிய பாடத்திட்டங்களை நடப்பு கல்வியாண்டில் இருந்தே நடைமுறைப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வகையில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு என்ஜினீயரிங் கல்லூரிகளில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment