ஆந்திராவில் மின் நிறுவன ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்த தடை
பணி நேரத்தில் போன் பேச அனுமதி கிடையாது என்றும், இடைவேளையின் போது செல்போனை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐதராபாத்,
ஆந்திரா அரசு நிறுவனமான மத்திய மின் விநியோக கார்ப்பரேஷன் லிமிடெட் (CPDCL) நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அரசு நிறுவனத்தில் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக சி.பி.டி.சி.எல். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜே.பத்மா ரெட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், பணி நேரத்தில் செல்போன்களை பயன்படுத்தி வேலை நேரத்தை வீணடிப்பதாகவும், இதனால் அன்றாட வேலை நேரத்தின் போது செல்போன் பயன்படுத்த தடை விதித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதி வருகிற 1-ஆம் தேதி அமலுக்கு வரும் என்றும், சி.பி.டி.சி.எல். ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வரும் போதே தங்கள் செல்போனை ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பணி நேரத்தில் போன் பேச அனுமதி கிடையாது என்றும், உணவு இடைவேளை மற்றும் தேநீர் இடைவேளையின் போது செல்போனை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் அதிகாரிகளுக்கு இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எந்த ஊழியராவது இந்த விதிகளை பின்பற்ற தவறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment