நடக்கும் போது கால் வலிக்கிறதா? - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, September 2, 2022

நடக்கும் போது கால் வலிக்கிறதா?

நடக்கும் போது கால் வலிக்கிறதா?
வயலில் இறங்கியோ, பல கிலோ மீட்டர் நடந்தோ, மூட்டை தூக்கியோ நமது முன்னோர்கள் வாழ்ந்து போன்ற வாழ்க்கை முறையை இப்போது நாம் வாழவில்லை. ஃபேன் மற்றும் லைட் சுவிட்சை ஆன் செய்யக்கூட ரிமோட்டைத் தேடும், ஹைடெக் தலைமுறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். போதாக்குறைக்கு மாறி வரும் லைஃப் ஸ்டைல், நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பது, கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது, உடல் உழைப்பு இல்லாமல் போவது, மறந்தும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களுக்கு அடிமையாவது போன்றவை நமது அன்றாட வாழ்க்கையை மட்டுமல்ல உடல் நிலையையும் சீரழித்து வருகிறது.

இப்படிப்பட்ட பழக்க வழக்கங்களால் உடலில் கொழுப்பு அதிகரிக்க கூடும் என்றும், அதனால் இருதய பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதில் அதிர்ச்சியளிக்ககூடிய விஷயம் என்னவென்றால் உடலில் கொழுப்பு அதிகரிப்பதை எந்த அறிகுறிகளாலும் அறிந்து கொள்ள முடியாது. குறிப்பாக தமனிகளில் சேரும் கொழுப்பால், நெஞ்சு வலி, இதய நோய், பக்கவாதம், போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

புற தமனி நோய் என்றால் என்ன?

உடலில் ரத்த ஓட்டத்தில் உண்டாகும் பாதிப்பானது புற தமனி நோய் என அழைக்கப்படுகிறது. உடம்பில் சேரும் அதிக அளவிலான கெட்ட கொழுப்பு தமனிகளில் அடைப்பை உண்டாக்குகிறது. தமனிகளில் சிறிது, சிறிதாக சேரும் கொழுப்பு இறுதியில் மெழுகு போல் உருவாகி ரத்த ஓட்ட பாதையில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் தமனிகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைகிறது. இந்த பிரச்சனை உருவாவதற்கான அறிகுறியாக கால்களில் வலி, நடப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம்.

நடக்கும் போது வலிக்கிறதா?

புற தமனி நோய் பாதிப்பு ஏற்படுமாயின் அதன் அறிகுறியாக கால்களில் வலி ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக நடக்கும் போது லேசானது முதல் கடுமையான வலியை உணர வாய்ப்புள்ளது. நிற்கும் போதும், நடக்கும் போதும் உருவாகும் வலியானது சிறிது நேர ஓய்விற்கு பிறகு குறைந்து போவது முக்கியமான அறிகுறியாக கருதப்படுகிறது. இதயத்திலிருந்து காலுக்கு செல்லும் ரத்தம் ஓட்டம் பாதிக்கப்படுவதால் வலி ஏற்படுவதாக கூறப்படுகிறது.

புற தமனி நோயின் அறிகுறிகள்:

உங்கள் காலில் வலியைத் தவிர, கீழே கொடுக்கப்பட்டுள்ள சில அறிகுறிகளும் ஏற்படலாம்,

1. கால்களில் முடி இழப்பு அல்லது வளர்ச்சி குறைவது

2. பாதங்கள் மரத்துப் போதல் அல்லது பலவீனமாக உணர்வது

3. எளிதில் உடையக்கூடிய அளவுக்கு வளமற்ற கால் நகங்கள்

4. பாதம் அல்லது கால் விரல்களில் ஏற்படக்கூடிய காயம் நீண்ட நாட்களுக்கு குணமடையாமல் இருப்பது

5. பாதத்தின் நிறம் வெளிரிப்போவது அல்லது நீல நிறத்திற்கு மாறுவது போன்ற பிரச்சனைகள் உருவாகலாம்.

மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?

புற தமனி நோய்களின் அறிகுறிகள் தீவிரமான உடல் நலப்பிரச்சனையாக மாறக்கூடும் என்பதால், மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. குறிப்பாக வாக்கிங் செல்லும் போது காலில் வலி ஏற்படுவது, மரத்துப் போவது, பாதத்தின் நிறம் மாறுவது போன்ற எந்த அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

கொழுப்பை குறைக்க உதவும் வழிகள்:

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு அதிக கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவது முக்கியமாகும். பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், பிஸ்கட், சீஸ், இறைச்சி போன்ற நிறைவுற்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க தினமும் உடற்பயிற்சி செய்வதோடு, புகைப்பிடித்தல் மற்றும் மதுப்பழக்கத்தை கைவிடுவது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.


No comments:

Post a Comment