நம் உடலின் நீர்ச் சமநிலையைப் பாதுகாப்பதற்காக உடல் நம்மிடம் தண்ணீர் கேட்கிறது. அதைத்தான் நாம் தாகமாக உணர்கிறோம். எனவேதான் உடல் கேட்கும் போது, தாகம் இருக்கும் போது தண்ணீர் குடிக்க வேண்டும் என்று புரிந்து கொண்டோம். தாகத்தின் அளவு நபருக்கு நபர் மாறுபடும் என்பதால் எல்லோருக்கும் பொதுவாக ஒரு அளவு இல்லை. எனவே, நம்முடைய தாகத்தின் அளவைப் பொறுத்து – நாம் குடிக்கும் தண்ணீரின் அளவும் இருக்க வேண்டும். தேவைப்படும் அளவை விட கூடுதலாக குடிக்கும் தண்ணீர் உடலுக்குச் சுமையாக மாறும்.
உயிர்ச்சத்தின் அளவு குறையாமல் இருக்க வேண்டுமானால், தண்ணீரைக் கொதிக்க வைக்காமல் குடிக்க வேண்டும் என்பதையும், அப்படி கொதிக்க வைத்தால் என்ன ஆகும் என்பதையும் புரிந்து கொண்டுள்ளோம்.
ஆர்.ஓ.வாட்டர் நல்லதா? என்று ஆராய்வோம். இதில் இரண்டு வகை. ஒன்று சாதாரண நல்ல தண்ணீரை தூய்மைப் படுத்துவதற்காகப் பயன்படுத்தும் சுத்திகரிப்பு முறை. இரண்டு – உப்புத் தண்ணீரை நல்ல தண்ணீராக மாற்றுவதற்காகப் பயன்படும் சுத்திகரிப்பு.
மழை நீரை நேரடியாகச் சேமித்து அதனை குடிப்பதற்கும், சாதாரணத் தண்ணீரைக் குடிப்பதற்கும் என்ன வேறுபாடு என்று உணர்ந்திருக்கிறீர்களா? உண்மையிலேயே அப்படி ஒரு வேறுபாடு இருக்கிறதா? நாள் முழுக்க விரதம் இருந்து விட்டு எதுவும் சாப்பிடாமல் தண்ணீரை மட்டும் முதலில் குடிக்கும் போது – நம் நாக்கு முழு உயிரோடு, உணரும் தன்மையோடு இருக்கும் போது இரண்டிற்குமான வேறுபாடு தெரியும். மழை நீரின் அடர்த்தியான சுவையும், சாதாரணத் தண்ணீரின் அடர்த்தி குறைந்த சுவையும் நம் நாக்கிற்கு தெரியும். இந்த சுவை மாறுபாட்டை எந்தக் கருவியும் கண்டுபிடிக்க முடியாது. இது மனிதனின் தனித் தன்மையான உணரும் தன்மை.
இதே போல, விஞ்ஞான கருவிகளின் அடிப்படையில் தூய்மையானதாக, சிறந்ததாகக் கூறப்படும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரின் சுவையையும் உணர முடியும். நாக்கு முழு உணரும் தன்மையோடு இருக்கும் போது கருவியால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரையும், மழை நீரையும் பயன்படுத்திப் பாருங்கள். சாதாரணத் தண்ணீர் அல்லது மழை நீர் இரண்டுமே நல்ல சுவையையும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் லேசான கசப்புச் சுவையையும் வெளிப்படுத்தும்.
சுவை என்பது அதன் உயிர்ச்சத்தைக் குறிக்கும். சுவைக் குறைவு உயிர்ச்சத்துக் குறைவை அறிவிக்கிறது. ஆனால், இந்த சுவை செயற்கையாக ஏற்றப்பட்டதாக இருக்கக்கூடாது. சுத்திகரிக்கப்படும் தண்ணீரில் செயற்கைச் சுவை கூட்டப்படுகிறது. அது தவிர, சுத்திகரிப்பிற்காகப் பயன்படுத்தப் படும் வேதியியல் பொருட்கள் சாதாரணத் தண்ணீரின் தன்மையை மாற்றுகிறது. அதன் உயிர்ச் சத்தைப் பாதிக்கிறது.
நம் வீட்டில் வளர்க்கும் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கொடுத்துப் பாருங்கள். முதன் முதலில் கொடுக்கும் போது இந்தப் பிராணிகள் சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை புறக்கணிக்கும். அதே போல கைக்குழந்தைகள் சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை புறக்கணிக்கும். ஏனென்றால் அதன் கசப்புத் தன்மை நாக்கில் வெளிப்பட்டு விடுகிறது. தொடர்ந்து நாம் கொடுத்துப் பழக்கும் போது வேறு வழியின்றி அதற்குத் தகுந்தாற்போல் தங்களை தகவமைத்துக் கொள்கின்றன.
அதே போல, ஒரு செடிக்கு சாதாரணத் தண்ணீரை ஊற்றி வாருங்கள். இன்னொன்றுக்கு சுத்திகரிப்புச் செய்த நீரை ஊற்றி வாருங்கள். சாதாரணத் தண்ணீர் ஊற்றப்பட்ட செடி நல்ல வளர்ச்சியோடும், செழுமையோடும் இருப்பதைப் பார்க்க முடியும். சுத்திகரிப்புச் செய்யப்பட்ட நீரின் உயிர்ச்சக்தி குறைவை தாவரங்கள் உணர்ந்து விடுகின்றன.
நீரின் தன்மையை அளக்கும் ஆகப்பெரிய விஞ்ஞானி – மீன்கள் தான். ஏனென்றால், நீரின் உயிர்ச்சத்தைப் பிரித்து எடுத்துத்தான் மீன்கள் உயிர் வாழவே முடியும். வண்ண மீன்கள் இரண்டை வாங்கி, சாதாரணத் தண்ணீரிலும் – சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரிலும் தனித்தனியாக விடுங்கள். சுத்திகரிக்கப்பட்ட நீரில் விடப்பட்ட மீனிற்கும், சாதாரணத் தண்ணீரில் விடப்பட்ட மீனிற்குமான வேறுபாடுகளைக் கவனியுங்கள். சில நேரங்களில் சுத்திகரிக்கப்பட்ட நீரில் விடப்பட்ட மீன்கள் இறந்து போவதும் உண்டு. ஏனென்றால் மீனிற்குத் தேவையான உயிர்ச்சத்து சுத்திகரிப்பால் அழிக்கப்படுகிறது, குறைக்கப்படுகிறது.
சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் உயிர்ச்சத்து குறைந்த தண்ணீர்தான். அப்படியானால் சாதாரணத் தண்ணீரை அப்படியே பயன்படுத்த முடியுமா? அதிலிருக்கும் கழிவுகளை, தூசிகளை என்ன செய்யலாம்?
சாதாரணத் தண்ணீரை கருவிகள் இல்லாமலும், உயிர் சத்துக் குறையாமலும் சுத்திகரிக்க முடியும். எப்படி? நாம் காலம் காலமாகப் பயன்படுத்தும் மண்பானைகள் மூலம்தான்.
சாதாரண மண்பானைகள் அப்படி என்னதான் செய்கின்றன? பானையில் ஊற்றப்படும் தண்ணீரை உயிர்ச்சத்து மிகுந்ததாக மாற்றுகின்றன. அதன் கழிவுகளை ஈர்த்து வெளியேற்றுகின்றன.
No comments:
Post a Comment