நாம் அன்றாட சமையலில் பயன் படுத்தும் ஒரு பொருள் உப்பு. உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்று பழமொழி உண்டு. ஆனால், உப்பு மிதமிஞ்சினால் உயிருக்கே ஆபத்தை தரும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சர்க்கரை நோயை பற்றியும், அதிக அளவிலான சர்க்கரை கேடு என்பதை மட்டுமே அடிக்கடி குறிப்பிடும் பலருக்கு சத்தமில்லாமல் உயிரை கொல்லும் உப்பின் ஆபத்து குறித்து தெரிவதில்லை. உப்பு உணவின் சுவையை அதிகரிக்கிறது, அத்துடன் உடலையும் ஆரோக்கியமாக வைக்கிறது. எனினும், உணவில் உப்பின் அளவு அதிகமானால், அது பல பக்க விளைவுகளையும் ஏற்படுத்தலாம்.
உப்பில் இருக்கும் ரசாயன பொருள்கள் உடலில் நீர்ச்சத்து, இரத்தத்தின் அளவு குறையாமல் இருக்கவும், இதயம் சீராக செயல்படவும் மிகவும் அத்தியாவசியமானது என்றாலும் உப்பின் அளவு அதிகரிக்கும் போது இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கிறது. அதிக உப்பை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அதிக உப்பை உட்கொள்வதால், சிறுநீரகங்கள் உடலில் இருந்து திரவங்களை வெளியேற்றுவது கடினமாகி சிறுநீரக பிரச்சனைகளை உண்டாக்குகிறது.
உடலில் உப்பு கூடும் போது கால்சியம் இயல்பாகவே குறையும், என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அதிக அளவு உப்பு கால்ஷியத்தை உறிஞ்சி விடும். இதனால், நமது எலும்புகள் வலுவிழந்து, மூட்டு வலி, ஆஸ்டியோபோரோஸிஸ் போன்ற நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. மேலும், உணவில் அதிக உப்பை உட்கொள்வது உடல் பருமனை அதிகரிக்கிறது. உப்பை அதிகமாக உட்கொள்வது உடலில் கலோரிகளை அதிகரிக்கிறது. இது உடல் கொழுப்பை அதிகரிக்கிறது. உப்பு அதிகமாக உட்கொள்வதால் இரைப்பைக் கட்டிகளும் ஏற்படலாம்.
No comments:
Post a Comment