தினம் ஒரு தகவல் படித்தது மறக்கிறதா..? - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, March 28, 2023

தினம் ஒரு தகவல் படித்தது மறக்கிறதா..?

நம்முடைய நினைவாற்றலின் திறன் அபாரமானது. புரிந்து படித்தவற்றை மட்டுமல்லாமல் புரியாமலேயே மனத்தில் பதித்த தகவல்களையும் அது எப்போதும் நினைவில் வைத்துக்கொள்கிறது. ஆதலால், நினைவில் வைத்துக்கொள்வது எப்போதும் ஒரு பிரச்சினையே அல்ல. வேண்டிய தருணத்தில் அதை வெளிக்கொண்டு வருவதில்தான் பிரச்சினை உள்ளது. மறதியும், பதற்றமும் பயமும் எப்போதும் அதற்குத் தடையாக உள்ளன. 

அந்தத் தடையை எப்படி வெல்வது? படித்தவற்றைச் சொல்லிப் பார்க்கும்போது உங்களுடைய காதுகளுக்கு கேட்கும் வண்ணம் உரக்கச் சொல்லிப் பாருங்கள். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்றெல்லாம் கவலைப்பட தேவையில்லை. உங்களுக்குப் பிடித்த பாடலின் ராகத்துக்கேற்ப பாடிப் பார்க்கலாம். இது ஒரு சுவையான விளையாட்டு. உங்களுக்குப் பிடித்த பழங்களையோ, கடலைகளையோ, உலர் பழங்களையோ அருகில் வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் ஒரு கடலையையோ பழத்தையோ உங்களுக்கு நீங்களே வழங்கிக்கொள்ளுங்கள். 

 படிப்பதைவிட மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது, படித்ததை எப்போதும் மறக்காமல் வைத்துக்கொள்ள உதவும். உங்களை நீங்கள் ஒரு ஆசிரியராக உருவகப்படுத்திக்கொண்டு வீட்டில் உள்ளவர்களுக்கோ உங்களுடைய நண்பர்களுக்கோ பாடம் எடுங்கள். 

வார்த்தைகளில் சிக்கிச் சிதைந்து போகாமல், திரும்பிப் படிக்கும்போது கழுகுப் பார்வையில் பாடத்தை மேலிருந்து மொத்தமாகத் திருப்புதல் மேற்கொள்ளுங்கள். உதாரணத்துக்குப் பாடங்களையும் அதன் தலைப்புகளையும் மட்டும் பார்த்துச் செல்வது. படிக்கும்போதும், சொல்லும்போதும் எழுதுவதை ஒரு பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். நினைவில் வைத்துக்கொள்ள இந்தப் பழக்கம் மிகவும் உதவும். எழுதியவற்றைத் திரும்ப வாசிப்பது, பழக்கப்பட்ட பாதையில் செல்வதுபோல் மிகவும் எளிதாக இருக்கும். 

 படிப்பவற்றை ஏதாவது ஒரு செயலுடன் தொடர்புபடுத்தி கொள்ளுங்கள். மிகவும் கடினமான பாடத்தைப் படிக்கும்போது ஒரு பந்தைச் சுவரில் போட்டுப் பிடித்தவாறே படிப்பதன் மூலம் கடினமான பாடத்தைப் பற்றி நீங்கள் நினைக்கும்போது எல்லாம் சுவரிலிருந்து திரும்பி வந்த பந்தைப் பிடித்தது ஞாபகத்துக்கு வந்து மகிழ்ச்சியை அளிப்பதோடு அந்தப் பாடத்தையும் எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள உதவும். கேள்விகளை வரிசை இன்றி எல்லாப் பாடங்களிலிருந்தும் மாற்றி மாற்றிக் கேட்கும்படி உங்களுடைய நண்பர்களிடம் சொல்லுங்கள். இதற்குப் பதில் அளிப்பதன்மூலம் மூளையின் திறனை நீங்கள் அதிகரிக்கலாம். 

 காலையில் படிப்பை எல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு இருபது நிமிடம் நடைப்பயிற்சி செய்யுங்கள். பழக்கம் இருந்தால் சிறிது தூரம் ஜாக்கிங்கூடச் செல்லலாம். இது மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரித்து அதைச் சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ள உதவும். இந்தப் பயிற்சி உடலுக்கு அல்ல, மூளைக்கு என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment