மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி? How to Get Admission in Central Govt Kendra Vidyalaya Schools? - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, March 31, 2023

மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி? How to Get Admission in Central Govt Kendra Vidyalaya Schools?

மத்திய அரசின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் அட்மிஷன் பெறுவது எப்படி? How to Get Admission in Central Govt Kendra Vidyalaya Schools?


இந்தியா முழுவதும் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளில் 2023 - 24 கல்வி ஆண்டிற்கான ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப முறை மார்ச் 27 முதல் துவங்கியுள்ளது. இது ஏப்ரல் 17 மாலை 7 மணியுடன் முடிவடையும். கேந்திர வித்யாலயா பள்ளிகளில் யார் யாருக்கு இடஒதுக்கீடு மற்றும் முன்னுரிமை, எப்படி சீட் பெறுவது என பார்ப்போம். சிவில் மற்றும் பாதுகாப்பு துறையின் கீழ் வரும் கேந்திர வித்யாலா பள்ளிகளில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதனைத் தொடர்ந்து மாநில அரசு ஊழியர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்குவர். இது தவிர பொதுத் துறை நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகளில் பணியாற்றுபவர்களின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிப்பர். பிறகு அனைத்து பிரிவு குழந்தைகளும் இந்த படிநிலையில் வருவர். 

பொதுத் துறை நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்களின் கீழ் வரும் கே.வி.,க்களில் அங்குப் பணியாற்றும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தொடர்ந்து ஊழியர்களின் பேரக்குழந்தைகளுக்கு, ஓய்வு பெற்ற ஊழியரின் குழந்தை அல்லது பேரக்குழந்தைக்கு என்ற வரிசையில் முன்னுரிமை அளிப்பர். அதன் பின்னர் அனைத்து வகையினரும் இதில் வருவர். இவை தவிர சிறப்பு விதிகளின் கீழ் வகுப்பின் அளவைக் காட்டிலும் குறிப்பிட்ட குழந்தைகள் கூடுதலாக சேர்த்துக்கொள்ளப்படுவர். பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள கேவிக்களுக்கு ராணுவம், விமானப் படை, கப்பல் படையினர் 6 பேரை பரிந்துரைக்கலாம். ஆனால் அவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்பினராக இருக்கக் கூடாது. 

 மேலும் கேந்திர வித்யாலா சங்கதன் ஊழியர்களின் பிள்ளைகள், பரம்வீர் சக்ரா, வீர் சக்ரா, அசோக் சக்ரா போன்ற விருது பெற்றவர்களின் குழந்தைகள், ஜனாதிபதி போலீஸ் மெடல் பெற்றவர்களின் பிள்ளைகள், மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்கள், ஸ்கவுட்டில் ராஷ்டிரபதி புரஸ்கர் விருது பெற்ற மாணவர்கள், கோவிட்டால் பெற்றோரை இழந்து பிஎம் கேர்ஸில் பதிவு செய்த பிள்ளைகள், ஒரே ஒரு பெண் குழந்தை ஆகியோர் சிறப்பு விதியின் கீழ் வருவர். 

தகுதி என்ன வேண்டும்? 

தற்போது முதல் வகுப்புக்கான அட்மிஷன் ஆரம்பமாகியுள்ளது. குழந்தைக்கு அந்த கல்வி ஆண்டில் கட்டாயம் 6 வயதாக இருக்க வேண்டும். ஏப்., 1 அன்று பிறந்த குழந்தையும் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள். மாற்றுத்திறனாளி குழந்தைகள் எனில் பள்ளியின் முதல்வர் 2 ஆண்டுகள் வயதில் தளர்ச்சி வழங்குவார். அதாவது 8 வயதிலும் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். 

 இடஒதுக்கீடு 

 எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இடஒதுக்கீடு உண்டு. 15% இடங்கள் எஸ்.சி., பிரிவினருக்கு, 7.5% எஸ்.டி., பிரிவினருக்கு, 27% இடங்கள் ஓ.பி.சி., பிரிவினருக்கு என ஒதுக்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இடஒதுக்கீடு உண்டு. 

விண்ணப்பிப்பது எப்படி? 

 https://kvsonlineadmission.kvs.gov.in/index.html என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். இது முதல் வகுப்பிற்கான சேர்க்கைக்கு மட்டுமே. 2 முதல் 9 வகுப்பினர் மற்றும் 11ம் வகுப்பினர் பள்ளி முதல்வரிடம் விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம். 

தேவையான ஆவணங்கள் 

குழந்தையின் புகைப்படம் முதல் வகுப்பில் சேர்க்கப்பட உள்ள குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழை ஸ்கேன் செய்து கொள்ளுங்கள். சாதிச் சான்றிதழ், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான சான்றிதழ் மாற்றுத்திறனாளி எனில் அதற்கான மருத்துவச் சான்று வசிப்பிடச் சான்று ஆகியவை கட்டாயம் 

சேர்க்கை வழி முறை 

பொதுவாக கேவி பள்ளிக்களில் ஒரு வகுப்பில் 40 பிள்ளைகள் இருப்பர். அதன்படி ஆர்.டி.இ., எனும் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் 10 பேர், எஸ்.சி., பிரிவில் 6 பேர், எஸ்.டி., பிரிவில் 3 பேர், ஓபிசி., பிரிவில் 11 பேர் என சேர்க்கப்படுவார்கள். முதலில் லாட்டரி முறையில் ஆர்.டி.இ., சீட்டுகள் நிரப்பப்படும். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கான இடங்கள், அரசு ஊழியர்கள் போன்ற முன்னுரிமையாளர்களுக்கான இடங்கள் நிரப்பப்படும். இவற்றிலும் எஸ்.சி., எஸ்.டி., ஒபிசி., இடஒதுக்கீடு பின்பற்றப்படும். 

அதன் பின்னர் நான்காவது லாட்டில் மீதமுள்ள சீட்டுகள் சாதிவாரி இடஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும். விண்ணப்பதாரர் பள்ளிக்கு அருகே இருக்கிறாரா என்பதும் பார்க்கப்படும். நகர்ப்புறம் எனில் 5 கி.மீக்குள் இருந்தால் அருகே உள்ளதாக பொருள். பிற இடங்கள் எனில் 8 கி.மீ., இருந்தால் அருகே இருப்பதாகப் பொருள். 

கட்டணம் 

ஆர்.டி.இ., சட்டம் 2009ன் கீழ் விண்ணப்பித்து சீட் பெறுவோருக்கு கட்டணம் கிடையாது. புத்தகங்கள், யூனிபார்ம், ஸ்டேஷனரி பொருட்கள் போன்றவற்றுக்கான பில்களை தந்தால் அப்பணமும் திருப்பி வழங்கப்படும். ஆர்.டி.இ., விண்ணப்பிக்க ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். உங்களது நிறுவனம் கல்விக் கட்டணத்தை ஊதிய கட்டமைப்பில் சேர்த்திருக்கக் கூடாது. மேற்கூறிய தகுதி மற்றும் ஆவணங்கள் இருந்தால், https://kvsonlineadmission.kvs.gov.in/index.html விண்ணப்பித்து சீட் பெறலாம்.

Thanks to Dinamalar

No comments:

Post a Comment