திறன் சார்ந்த படிப்புகள் (தலையங்கம்) - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, March 17, 2023

திறன் சார்ந்த படிப்புகள் (தலையங்கம்)

திறன் சார்ந்த படிப்புகள் (தலையங்கம்) 

அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க பள்ளிக்கூடங்களில் சேர வேண்டும், இடை நிற்றல் இருக்கக்கூடாது என்ற வகையில் பள்ளிக்கூட கல்வித்துறை எடுத்த தீவிர நடவடிக்கையால் இப்போது மழலையர் வகுப்புகளிலும், தொடக்க வகுப்புகளிலும் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. பள்ளிக்கூட கல்வியை முடித்ததோடு மாணவர்கள் நின்று விடக்கூடாது, அவர்கள் உயர் கல்விக்கு செல்லவேண்டும். குறிப்பாக தொழில்கல்வியில் சேர வேண்டும் என்ற வகையில் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 


மாணவர்கள் மத்தியில் நாங்கள் படித்து முடித்த பிறகும் எங்களுக்கு வேலை கிடைக்கவில்லையே என்ற மனக்குறை அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அதற்கு தகுதியானவர்களுக்கு மட்டுமே உடனடியாக கேம்பஸ் இண்டர்வியூக்களில் வேலை கிடைக்கிறது. இப்போது படித்துக்கொண்டு இருக்கும் மாணவர்கள் தங்கள் படிப்பு முடிந்தவுடன் வேலையில் சேர நியமன உத்தரவும் கொடுக்கப்பட்டுவிடுகிறது. இதுபோல அனைத்து மாணவர்களும் உடனடியாக வேலை வாய்ப்பை பெறும் வகையில் பல முனைப்புகளை உள்ளடக்கிய ‘நான் முதல்வன்’ திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். 


இது அவருடைய கனவு திட்டம். கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளன்று அவர் மிகவும் மகிழ்ச்சியோடு தொடங்கி வைத்த இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், மாணவர்களை போட்டி மிகுந்த இந்த காலத்தில் வேலைக்கு தகுதிப்படுத்துவதுதான். ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களை படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்தி நாட்டுக்கு வழங்குவதுதான் இந்த திட்டத்தின் லட்சியமாகும். அந்த வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கோட்பாடுகளை அனைத்து தொழில் கல்லூரிகள், அறிவியல், கலை கல்லூரிகளிலும் திறன் சார்ந்த படிப்புகளை தொடங்கும் திட்டங்களை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர் இன்னசென்ட் திவ்யா வகுத்து கொடுத்து இருக்கிறார். தமிழ்நாட்டில் 794 அரசு மற்றும் தனியார் கலை கல்லூரிகள் இருக்கின்றன. 
இதில் தன்னாட்சி சுயநிதி கல்லூரிகளை தவிர, மற்ற கல்லூரிகளில் திறன் சார்ந்த படிப்புகளை கற்றுக்கொடுக்க, பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவர்களின் பாடத்திட்டத்துக்கு கூடுதலாக ஆங்கில மொழியில் புலமை, ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இணையதள மார்க்கெட்டிங், இணையதள வங்கி சேவை போன்ற 13 படிப்புகளை ஏட்டளவில் மட்டுமல்லாமல் நேரடியாக அந்தந்த நிறுவனங்களுக்கு சென்று செயல்முறை பயிற்சி பெறவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு செமஸ்டரிலும் ஒரு திறன் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. 
 இதுபோல என்ஜினீயரிங், பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் 23 வகையான திறன் சார்ந்த வகுப்புகளுக்கு செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக இப்போது மின்சார வாகனங்கள் பயன்பாடு ஊக்குவிக்கப்படும் நிலையில், அதுதொடர்பான திறன் மேம்பாடு அளிக்க திட்டம் இருக்கிறது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் வடிவமைத்து தந்த இந்த படிப்புகளை நான் முதல்வன் திட்டத்தின்கீழ் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் டி.கார்த்திகேயன், அனைத்து பல்கலைக்கழகங்களிடமும் தெரிவித்துள்ளார். இந்த முயற்சிகளெல்லாம் மிகவும் பாராட்டுக்குரியது, வரவேற்புக்குரியது. மாணவர்கள் தங்கள் படிப்பை முடிக்கும்போது திறன் சார்ந்த கல்வியையும், பயிற்சிகளையும் பெற்று வெளியே வருவார்கள் என்பதால் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளுக்கான கதவுகளும் திறந்தேயிருக்கும். அவர்களின் வாழ்வும் வளம்பெறும்.

No comments:

Post a Comment