சிறார் திரைப்படத்தை இயக்குதல் போட்டியில் முதலிடம் பிடித்து, அமெரிக்கா செல்லும் வாய்ப்பை அரசு பள்ளி மாணவி பெற்றார். அவரை கல்வித்துறை அதிகாரிகள் பாராட்டினர்.
கலைத்திருவிழா
தமிழக பள்ளிக்கல்வி துறை சார்பில் சமீபத்தில் நடத்தப்பட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கலைத்திருவிழா, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அரசு பள்ளி மாணவர்களின் பன்முக திறன்களை வெளிப்படுத்த நல்ல ஒரு களமாக கலைத்திருவிழா அமைந்தது. இதில், ஏராளமான மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக கல்வி சாரா மன்ற செயல்பாடுகளை அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களிடம் ஊக்குவிக்கும் வகையில் இலக்கிய மன்றம், சிறார் திரைப்படம் இயக்குதல், வானவில் மன்றம், வினாடி-வினா தொடர்பாக பள்ளி அளவிலும் மற்றும் ஒன்றிய, மாவட்ட, மாநில அளவிலும் போட்டிகள் நடைபெற்றன. இதில், சிறார் திரைப்படம் இயக்கும் போட்டியில் தனிநபர் மற்றும் குழு போட்டிகள் நடைபெற்றன.
அமெரிக்கா செல்லும் மாணவி
அதன்படி, “திரைப்படத்தின் ஒரு காட்சியை இயக்குதல்” என்ற தனிநபர் பிரிவில் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே அ.குரும்பபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் கீர்த்தனா என்ற மாணவி மாநில அளவிலான போட்டிக்கு தேர்வானார்.
இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். அப்போது அந்த மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டனர். மேலும் அவர்களுக்கு திரைப்படத்தின் ஒரு காட்சியை இயக்குவது தொடர்பாக 6 நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
பின்னர் நடந்த போட்டியில், கீர்த்தனா உள்பட 14 பேர் அடங்கிய குழு முதலிடத்தை பிடித்தது. இப்போட்டியில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என்று ஏற்கனவே பள்ளிக்கல்வி துறை அறிவித்திருந்தது.
அதன்படி, கீர்த்தனா உள்ளிட்ட 14 பேரும் அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் வாய்ப்பை பெற்றனர். இவர்கள், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட நகர் மற்றும் பல்வேறு இடங்களை சுற்றி பார்க்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாரிகள் பாராட்டு
அமெரிக்கா செல்லும் மாணவி கீர்த்தனாவின் தந்தை மதனகோபால், தாய் ராஜேஸ்வரி ஆவர். மதனகோபால் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கீர்த்தனாவுக்கு புவனா என்ற அக்காளும், ஜீவானந்தம் என்ற தம்பியும் உள்ளனர்.
அமெரிக்கா செல்ல தேர்வான மாணவி கீர்த்தனாவை கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment