குழந்தைகள் சந்திக்கும் ஆபத்துகள் Risks faced by children
குழந்தைகளின் உடலை அடையும் வேதிப்பொருட்களின் பாதிப்புகள் உடனடியாகக் குழந்தையாக இருக்கும்போதே வெளிப்பட்டு விடுவதில்லை. நம்மைவிட குழந்தைகளின் எதிர்காலம் நீண்டது. அவர்களின் வாழ்நாள் நம்மைவிட அதிகம்.
அதனால் பின்விளைவுகள் காலம் தாழ்த்தி, அவர்கள் பெரியவர்கள் ஆனபிறகும் வெளிப்படலாம்.
நாம் பெரியவர்களான பிறகு எதிர்கொள்ளும் புற்றுநோய், மூளை பாதிப்பு, இனப்பெருக்கக் குறைபாடுகள் போன்றவற்றுக்கான காரணங்களை, தாயின் கருவில் நாம் வளரத்தொடங்கிய காலத்திலிருந்தே தேடவேண்டி உள்ளது..
குழந்தை பிறந்த பிறகு எதிர்கொள்ளும் வேதிப் பொருட்களின் தாக்கத்தைவிட கருவில் இருக்கும்போதும், சிசு வளர்ச்சியின்போதும் எதிர்கொள்ளும் வேதிப்பொருட்களின் தாக்கம் ஆபத்தானவை என்பதை வாஷிங்டனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பணிக்குழு என்ற அமைப்பின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
வளர்ந்த மனிதன் வேதிமாசுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆபத்துகளைவிட குழந்தைகள் வேதி மாசுகளை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆபத்துகள் கடுமையானவை. நீண்டகாலப் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. பொதுவாகக் குழந்தைப் பருவத்தில் உடல் செல்கள் அதிவேகமாக வளர்ச்சி அடைகின்றன. குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியோ முழு வளர்ச்சி அடையாத நிலையில் இருக்கிறது.
இதன் காரணமாக வேதித் தாக்குதலின் தீவிரம் குழந்தைகளிடம் அதிகம்.
குழந்தைகளின் உடலில் வேதி கூட்டுப்புரதங்கள் குறைவாக இருப்பதால், வெளியிலிருந்து உள்ளேவரும் வேதி மாசுகளை வரவேற்கும் நிலையில் அவர்களுடைய உடல் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அப்படி உள்ளே வரும் நஞ்சுகள், அவற்றுக்கான இலக்கு உறுப்புகளை அடைந்து அவற்றை எளிதாக பாதிப்பதாக வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.
No comments:
Post a Comment