தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு மூலம் கடந்த 2018-ம் ஆண்டு 12 ஆயிரம் பணியிடங்களும், 2019-ம் ஆண்டு 10 ஆயிரம் பணியிடங்களும் நிரப்பப்பட்டன. ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக எந்த தேர்வும் நடத்தப்படவில்லை.
இதனால், போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால், 2 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்படும் தேர்வில், 2 ஆண்டுகளாக நிரப்பப்பட வேண்டிய அனைத்து காலிப்பணியிடங்களும் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகும் என்று போட்டித் தேர்வர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர்.
ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு இலவு காத்த கிளி போல மாறிவிட்டது. அவர்களின் அரசுப்பணி கனவாகிப் போய்விடுமோ என்ற கலக்கத்தில் உள்ளனர். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும், அனைவருக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் எனவும் கூறியிருந்தது. இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும். அதற்கான கலந்தாய்வை இந்த ஆண்டே நடத்தி பணி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment