மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கை தரும் டச்யானா - துளிர்கல்வி

Latest

Search This Site

الثلاثاء، 16 مايو 2023

மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கை தரும் டச்யானா

மாற்றுத்திறனாளிகளுக்கு நம்பிக்கை தரும் டச்யானா 

உலகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தன்னம்பிக்கை தருபவராக விளங்குகிறார், டச்யானா. முதுகெலும்பில் துளையுடன் இடுப்புக்குக் கீழே இயங்காத தன்மையோடு, ரஷியாவில் பிறந்தவர். பிறந்த 3 வாரங்களுக்குள் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் குழந்தையைக் காப்பாற்ற முடியாது என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். 

ஆனால் டச்யானாவின் தாயாரால் ஏற்பாடு செய்ய இயலவில்லை. 3 வாரங்களுக்குப் பிறகும் குழந்தை உயிரோடு இருந்ததில் மருத்துவர்களுக்கு ஆச்சரியம். அந்த குழந்தையை ஆதரவற்றவர்கள் இல்லத்தில் தாயார் சேர்த்துவிட்டார். மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த அந்த இல்லத்தால் டச்யானாவுக்கு ஒரு சக்கரநாற்காலி கூட ஏற்பாடு செய்ய இயலவில்லை. 6 ஆண்டுகள் வரை தோள்களைக் கால்களாகவும் கைகளைப் பாதங்களாகவும் பயன்படுத்தி நகர்ந்துவந்தார், டச்யானா. படிப்பிலும், விளையாட்டிலும் ஆர்வம் மிகுந்த அவர், இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். நியூயார்க், சிகாகோ, லண்டன், பாஸ்டன் ஆகிய இடங்களில் நடந்த மாரத்தான் போட்டிகளில் சாம்பியன் பட்டங்களைப் பெற்றார். 

2013-ம் ஆண்டில் மட்டும் 4 மாரத்தான் போட்டிகளில் கலந்துகொண்டு அனைத்திலும் சாம்பியன் பட்டங்களை வென்றார். இதுவரை யாரும் செய்யாத உலகச் சாதனை இது. அந்த ஆண்டில் 6 தங்கப் பதக்கங்களை வென்று உலகச் சாம்பியன் பட்டங்களையும் குவித்தார். 2014-ல் மாற்றுத் திறனாளிகளுக்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்காக ரஷியா சென்றார். பனிச்சறுக்கு போட்டியில் ஓடும் பாதையை தவற விட்டதால் தங்கப்பதக்கம் நழுவியது. வெள்ளிப்பதக்கம் வென்றார். “இந்தப் பதக்கத்தை என் குடும்பத்துக்கு அர்ப்பணிக்கிறேன். இதில் என்னைப் பெற்ற தாயும் அடங்குவார்” என்றார், டச்யானா.

ليست هناك تعليقات:

إرسال تعليق