உயர்கல்வியை தொடரும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு சாதி, வருமான மற்றும் இருப்பிட சான்றிதழ்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர்சாத்தூர் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
உயர்கல்வி சேர்க்கை
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியாகின. மாணவ, மாணவிகளின் மதிப்பெண் பட்டியலும் வெளியாகி உள்ளது. எனவே அவர்கள் பெற்ற மதிப்பெண்ணுக்கு ஏற்றபடியான உயர் கல்வியில் அவர்கள் சேர முற்பட்டு உள்ளனர். உயர் கல்வியில் சேர்வதற்கு பல்வேறு சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன. எனவே அவற்றை உடனடியாக வழங்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் உத்தரவிட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
உடனடியாக வழங்குங்கள்
மாணவ, மாணவிகள் தங்களுடைய உயர்கல்வியை தொடர்வதற்கு ஏதுவாக, வருவாய் துறையின் மூலம் வழங்கப்பட்டு வரும் சாதிச்சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மற்றும் வருமான சான்றிதழ் ஆகியவற்றை முன்னுரிமை கொடுத்து உடனடியாக வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்ட கலெக்டர்களையும்அறிவுறுத்தி உள்ளார். இச்சான்றிதழ் அனைத்தும் இணைய வழியாக வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, மாணவ, மாணவிகள் இணைய வழியாக விண்ணப்பித்து தேவையான சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுமாறு வருவாய்த்துறையின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், சான்றிதழ்களை எவ்வித காலதாமதம் இன்றி வருவாய் வட்டாட்சியர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள் உடனடியாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுஉள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment