மாணவர்களுக்காக ஆட்டோ ஓட்டும் ஆசிரியர்: தலைமைச் செயலர் நேரில் அழைத்து பாராட்டு - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, June 23, 2023

மாணவர்களுக்காக ஆட்டோ ஓட்டும் ஆசிரியர்: தலைமைச் செயலர் நேரில் அழைத்து பாராட்டு

மாணவர்களுக்காக ஆட்டோ ஓட்டும் ஆசிரியர்: தலைமைச் செயலர் நேரில் அழைத்து பாராட்டு வேலூர் மாவட்டத்தில் மலைக்கிராம மாணவர்கள் தடையில்லாமல் கல்வி கற்க சொந்த செலவில் ஆட்டோ வாங்கியதுடன் அதைத்தானே ஓட்டி மாணவர்களை பள்ளி அழைத்துவரும்ஆசிரியர் தினகரனின் செயல் பலரது பாராட்டை பெற்றுள்ளது. வேலூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லையில் உள்ள பேரணாம்பட்டு அருகேயுள்ள முக்கியமான மலைக் கிராமங்களில் ஒன்றாக பாஸ்மார்பெண்டா அமைந்துள்ளது. 

வேலூர் மாவட்டத்தின் கடைகோடி கிராமமான இங்கு, கூலி தொழிலாளிகள் அதிகம். சொந்த செலவில்: இக்கிராமத்தில் 1969-ம் ஆண்டு முதல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. 50 ஆண்டுகளை கடந்த இந்த பள்ளியில் தற்போது 100-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளி ஆசிரியர் தினகரன், மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக தனது சொந்த செலவில் ஆட்டோ வாங்கியதுடன், அதை தானே ஓட்டிச்சென்று மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரும் செயல் பலரது பாராட்டை பெற் றுள்ளது. இதுகுறித்து அவர் நம்மிடம் கூறும்போது, 

‘‘பேரணாம்பட்டு அருகேயுள்ள கொத்தப்பல்லிதான் சொந்த ஊர். கடந்த 12 ஆண்டுகளாக இப்பள்ளியில் பணிபுரிகிறேன். இந்த பள்ளி அருகில் உள்ள தாம ஏரி, கொல்லைமேடு உள்ளிட்ட குக்கிராமங்களில் இருந்து 40-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்கள் பள்ளிக்கு வந்து செல்ல பேரணாம்பட்டில் இருந்து அரவட்லா வரை இயக்கப்படும் மினி பஸ் மட்டுமே உள்ளது. இந்த பஸ்சை தவறவிட்டால் பள்ளிக்கு நடந்துதான் வரவேண்டும். குறுக்குப் பாதையில் வயல் வரப்புகளில் வரும் மாணவர்கள் பலர் பள்ளிக்கு வந்ததும் சோர்வடைந்து தூங்குவதும், படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருப்பதை பலமுறை பார்த்திருக்கிறேன். 

சிலர் பஸ்சை தவறவிட்டால் பள்ளி செல்ல நேரமாகிவிடும் என்று வீட்டிலே இருந்துவிடுவார்கள். போக்குவரத்து பிரச்சினை: பள்ளி மாணவர்களின் போக்குவரத்து பிரச்சினைக்கு குறைந்தபட்ச தீர்வாக இருக்க வேண்டும் என்பதற்காக 3 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ வாங்க தீர்மானித்து பணத்தை சேகரித்தேன். ஒரு லட்சத்து 10 ஆயிரம் செலவில் என் பள்ளிக்காக சொந்தமாக ஆட்டோ வாங்கியதுடன் அதை நானே ஓட்டிச்சென்று பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வருவதுடன் பள்ளி முடிந்ததும் அவர்களின் கிராமத்துக்கு கொண்டு போய் விட்டு விடுகிறேன். இப்போதெல்லாம் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். 

இதையறிந்த அரசு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு என்னை நேரில் அழைத்துப் பாராட்டினார். பெரிய சந்தோஷம்: தினமும் ஆட்டோவில் பள்ளிக்கு காலை 7 மணிக்கு புறப்பட்டு பாஸ்மார்பெண்டா கிராமத் துக்கு 7.50 மணிக்கு சென்று விடுவேன். அங்கிருந்து கொல்லைமேடு, தாமஏரி உள்ளிட்ட குக்கிராமங்களுக்கு சென்று மாணவர்களை ஏற்றி வருகிறேன். என் ஆட்டோவில் வரும் மாணவர்கள் நாளைக்கு டாக்டர்களாக, இன்ஜினியர்களாக, ஆசிரியர்களாக வந்தால் எனக்கு அதைவிட பெரிய சந்தோஷம் எதுவும் இல்லை. இவ்வாறு ஆசிரியர் தினகரன் தெரிவித்தார். கல்வி ஒன்றே சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்கிறது என்பதை ஆசிரியர் தினகரன் தனது செயலால் நிறைவேற்றி வருவது பாராட் டுக்குரியது.

No comments:

Post a Comment