பள்ளிக் கல்வித்துறையால் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், கற்றல்-கற்பித்தல் நடைமுறை, மாணவர்களின் கற்றல் வெளிப்பாடு ஆகியவற்றின் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் எந்த அளவில் இருக்கிறது? என்பதை கண்காணிக்க மாவட்ட அளவில் அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், அரசுக்கு கருத்துரு அனுப்பி இருந்தார்.
அவருடைய கருத்துருவை கவனமாக பரிசீலித்து, 2023-24-ம் ஆண்டில் பள்ளிக் கல்வித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க குழு அமைக்க அனுமதி அளித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா நேற்று அரசாணை வெளியிட்டு இருக்கிறார்.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் தலா ஒரு பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், பள்ளிக்கல்வி இயக்குனர் ஜி.அறிவொளி திருவள்ளூர் மாவட்டத்துக்கும், தொடக்கக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வேலூர் மாவட்டத்துக்கும், முறைசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனர் எம்.பழனிசாமி நாகப்பட்டினம் மாவட்டத்துக்கும், தனியார் பள்ளிகள் இயக்குனர் எஸ்.நாகராஜமுருகன் தேனி மாவட்டத்துக்கும், அரசு தேர்வுத்துறை இணை இயக்குனர் பி.ஏ.நரேஷ் கரூர் மாவட்டத்துக்கும் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றனர்.
சென்னை மாவட்டத்துக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் (பள்ளிக்கல்வி) உஷாராணி உள்பட 38 மாவட்டங்களுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கல்வித்துறை திட்டங்களின் செயல்பாடுகள் கண்காணிக்க இருக்கின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق