மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை இருமடங்கு உயர்வு அரசு அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, July 22, 2023

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை இருமடங்கு உயர்வு அரசு அறிவிப்பு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை இருமடங்கு உயர்வு அரசு அறிவிப்பு தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பல்வேறு நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறது. 

மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகளுக்கு 2013-2014-ம் நிதியாண்டு முதல் அவர்களின் கல்வியினை மேம்படுத்தும் வகையில் 1-ம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை படிக்கும் வகுப்பிற்கு ஏற்றவாறு கல்வி உதவித்தொகை குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் ரூ.7 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் 2023-2024-ம் நிதியாண்டுக்கான மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மானியக்கோரிக்கையின்போது முதல்-அமைச்சரால், 'மாற்றுத்திறன் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை இருமடங்காக உயர்த்தி வழங்கப்படும்' என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகையினை இருமடங்காக உயர்த்தி, 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.1,000 என்பதை ரூ.2 ஆயிரமாகவும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.3 ஆயிரம் என்று இருந்த உதவித்தொகை ரூ.6 ஆயிரம், 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.4 ஆயிரம் என்று இருந்ததை ரூ.8 ஆயிரமாக உயர்த்தப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது. 
இளங்கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.6 ஆயிரம் என்று இருந்ததை ரூ.12 ஆயிரம் ஆகவும், முதுகலை பட்டம் மற்றும் தொழிற்கல்வி படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ரூ.7 ஆயிரம் என்பதை ரூ.14 ஆயிரமாகவும் வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment