சிவில் சர்வீசஸ் தேர்வு
ஊக்கத்தொகைக்கான மதிப்பீட்டு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்
17-ந்தேதி கடைசிநாள்
சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை திட்டத்துக்கு மதிப்பீட்டுத் தேர்வில் பங்குபெற வருகிற 17-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மதிப்பீட்டுத் தேர்வு
மத்திய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை தமிழ்நாட்டு இளைஞர்கள் எளிதாக அணுகும் வண்ணம் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் போட்டித் தேர்வு பிரிவு தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியுடன் இணைந்து சிறந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீசஸ் படித்து வரும் 1,000 மாணவர்கள், மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். முதல்நிலைத் தேர்வுக்கு தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரத்து 500 வழங்கப்படும். இது சமீபகாலமாக சிவில் சர்வீசஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் விகிதத்தை மாற்றி அமைக்க தமிழ்நாடு அரசால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊக்கத்தொகை திட்டம்
இதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வின் ஊக்கத்தொகை திட்டத்துக்கான மதிப்பீட்டு தேர்வை அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந்தேதி நடத்த திட்டமிட்டு இருக்கிறது.
ஏற்கனவே அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியின் கீழ் இயங்கி வரும் அகில இந்திய குடிமைப்பணிகள் பயிற்சி மையங்களுக்கான நுழைவுத்தேர்வும் இதில் ஒருங்கிணைக்கப்படுகிறது.
இந்த மதிப்பீட்டுத் தேர்வை எழுதி ஊக்கத்தொகை பெற விரும்புபவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் விரிவான அறிவிப்பை படித்து பார்த்து இன்று (புதன்கிழமை) முதல் 17-ந்தேதிக்குள் (வியாழக்கிழமை) விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான மதிப்பீட்டுத் தேர்வு அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந்தேதி நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment