பி.இ. நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கை: இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்!
தமிழகப் பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். நேரடி இரண்டாமாண்டு சோ்க்கைக்கு விண்ணப்பிக்க இயலாத மாணவ, மாணவிகள் இணைய வழியில் வருகிற 22-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு தொழில்நுட்பக் கல்வித் துறை வழிகாட்டுதலின் பேரில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பச் செட்டியாா் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி கலந்தாய்வு மையமாக செயல்பட்டு வருகிறது. இந்த மையம் மூலம் கடந்த சில ஆண்டுகளாக இணைய வழியில் விண்ணப்பம் பெறப்பட்டு, அதன் மூலமே கலந்தாய்வு நடத்தி, மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வருகிறது.
நிகழ் கல்வியாண்டு இரண்டாமாண்டு சோ்க்கைக்காக 16,594 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் தகுதியான 15,300 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு, தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இவா்களுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை நிறைவடைந்தது. பி.எஸ்சி. முடித்த மாணவா்களுக்கு வருகிற 23-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், பல்வேறு காரணங்களால் இரண்டாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்க இயலாத மாணவா்களுக்காக துணைக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதற்கு வருகிற 22-ஆம் தேதி வரை இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கான சான்றிதழ் சரிபாா்ப்புக்கு வருகிற 25-ஆம் தேதி இணையதளம் மூலமே பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளதால், மாணவா்கள் நேரில் பங்கேற்கத் தேவையில்லை. பட்டயப் படிப்பில் எந்தப் பாடப் பிரிவில் படித்திருந்தாலும், இரண்டாமாண்டு நேரடி பொறியியல் சோ்க்கையில் விரும்பிய பாடப் பிரிவில் சேரலாம். மேலும் விவரங்களுக்கு கலந்தாய்வு ஒருங்கிணைப்பாளா் க. பாஸ்கரனை 9443661901 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என கலந்தாய்வுச் செயலரும், கல்லூரி முதல்வருமான பி.கே. பழனி தெரிவித்தாா்.
No comments:
Post a Comment