புதுச்சேரி சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 105 சுகாதார அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
செவிலிய அதிகாரி
புதுச்சேரி அரசு சுகாதாரத்துறையில் 105 செவிலிய அதிகாரி பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியானது. அப்போது கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த செவிலியர்கள் தங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து பணி நியமன அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது.
அதன்பின் செவிலியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்தநிலையில் சுகாதாரத்துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் தொடர் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டார்.
விண்ணப்பிக்கலாம்
இந்தநிலையில் புதுச்சேரி சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 105 செவிலிய அதிகாரி பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு புதுச்சேரியை சேர்ந்த தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வி தகுதி, இடஒதுக்கீடு, ஊதியம் உள்ளிட்ட விவரங்களை https://recuitment.py.gov.in மற்றும் https://health.py.gov.in என்ற இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம்.
வருகிற 29-ந் தேதி காலை 10 மணி முதல் https://recuitment.py.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அடுத்த மாதம் (அக்டோபர்) 28-ந் தேதி கடைசி நாளாகும்.
மேற்கண்ட தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment