காலாண்டு தேர்வில் பொது வினாத்தாள்
தேர்வு அட்டவணை, வழிகாட்டுதல்கள் வெளியீடு
காலாண்டு தேர்வில் பொது வினாத்தாள் நடைமுறை அமல்படுத்தப்படுகிறது. அதற்கான தேர்வு அட்டவணையும், வழிகாட்டுதல்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
பொது வினாத்தாள்
அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளின் கற்றல் திறன் பாதிப்பு அதிகரித்து இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டின.
இதற்கு அந்தந்த மாவட்ட அளவில் வினாத்தாள்கள் அமைக்கப்படுவதும், அந்த வினாத்தாள்கள் புத்தகத்துக்கு பின்புறத்தில் உள்ள வினாக்களை மட்டுமே கொண்டதாக இருப்பதும், இது மாணவர்களின் கற்றல் திறனை பாதிப்பதாக இருப்பதும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.
இதற்கு தீர்வை ஏற்படுத்தும் வகையில் பொது வினாத்தாள் நடைமுறையை கொண்டு வர பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் இதனை அமல்படுத்த திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து மாவட்டங்களில் நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்வு அட்டவணை
அதன்படி, 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு பொது வினாத்தாள் நடைமுறை அமலுக்கு வருகிறது. அதற்கான தேர்வு அட்டவணையையும், தேர்வை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களையும் கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.
இதில் 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வருகிற 19-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை தேர்வு நடக்கிறது. 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு காலையிலும், 9 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புகளுக்கு பிற்பகலிலும் தேர்வு நடத்தப்பட உள்ளது. பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கு 15-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-1 வகுப்புக்கு காலையிலும், பிளஸ்-2 வகுப்புக்கு பிற்பகலிலும் தேர்வு நடத்தப்படுகிறது.
வழிகாட்டுதல்கள்
தேர்வு நடைபெறும் நாளுக்கு முந்தைய நாளில் அந்த தேர்வுக்கான வினாத்தாள்களை தலைமை ஆசிரியர்கள் எமிஸ் கணக்கு எண்ணை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து ‘பிரிண்ட்' எடுத்து வைக்க வேண்டும்.
பதிவிறக்கம் செய்வதில் பிரச்சினை இருந்தால், 14417 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அதை பதிவு செய்யவேண்டும். எந்த காரணத்தை கொண்டு வேறொரு பள்ளியின் எமிஸ் கணக்கை பயன்படுத்தி வினாத்தாளை பதிவிறக்கம் செய்யக்கூடாது.
தேர்வு நடத்துவதில் சிக்கல்கள் இருந்தால் அதுபற்றி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, அந்தந்த பள்ளிகள் தெரிவித்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது போன்ற பல்வேறு வழிகாட்டுதல்களை, பள்ளிக்கல்வித்துறை வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment