31-ந்தேதி கடைசிநாள்: திறன் சார்ந்த 3 ஆண்டு தொழிற்கல்வி படிப்புகள் அறிமுகம் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல் - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, October 25, 2023

31-ந்தேதி கடைசிநாள்: திறன் சார்ந்த 3 ஆண்டு தொழிற்கல்வி படிப்புகள் அறிமுகம் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

31-ந்தேதி கடைசிநாள்: திறன் சார்ந்த 3 ஆண்டு தொழிற்கல்வி படிப்புகள் அறிமுகம் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல் 
திறன் சார்ந்த 3 ஆண்டு தொழிற்கல்வி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது என்றும், இதற்கு விண்ணப்பிக்க வருகிற 31-ந்தேதி கடைசிநாள் என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்தார். 

 3 ஆண்டு படிப்புகள் 

அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் 2 திறன்சார்ந்த தொழிற்கல்வி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதுபற்றி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- ‘நான் முதல்வன்' திட்டத்தின் ஓராண்டு நிறைவு விழாவில், அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை தொழிற்கல்வி பாடத்தை ஆரம்பிப்பது பற்றி முதல்-அமைச்சர் கூறியிருந்தார். அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம் தற்போது தளவாட மேலாண்மை, காலணி உற்பத்தி ஆகிய 3 ஆண்டு பட்டப்படிப்புகளை அறிமுகம் செய்கிறது. காஞ்சீபுரம் அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரியில் தளவாட மேலாண்மை படிப்புகளும், ஆரணி அண்ணா பல்கலைக்கழக வளாகக் கல்லூரியில் காலணி உற்பத்தி படிப்புகளும் உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 31-ந்தேதி கடைசிநாள். திறன்சார்ந்த படிப்புகள் இது. கடந்த ஆண்டுகளில் என்ஜினீயரிங் படிப்புகளில் அறிவுசார்ந்து கற்றுக்கொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது திறன்சார்ந்த கற்றல் தேவைப்படுகிறது. அதற்கேற்றாற்போல், பாடத்திட்டங்களில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. 

  வேலைவாய்ப்புகள் 

அதேபோல் திறனை வளர்ப்பதற்கான படிப்புகளை அறிமுகம் செய்வதன் மூலம் நல்ல வேலைவாய்ப்புகளில் அமரலாம். அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகம் செக்டார் ஸ்கில் கவுன்சிலுடன் இணைந்து இந்த 2 படிப்புகளை அறிமுகம் செய்துள்ளது. வருங்காலங்களில் இன்னும் அதிகமாக ஆரம்பிக்க இருக்கிறோம். குறிப்பாக, அடுத்த ஆண்டில் அதிக படிப்புகள் தொடங்கப்படும். படிக்கும்போதே மாணவர்கள் 6 மாதம் தொழிற்சாலையில் அனுபவ படிப்புகளை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் அவர்களுக்கான புரிதல் அதிகமாக இருக்கும். திறன்சார்ந்த இந்த படிப்புகளுக்கு என்ஜினீயரிங் படிப்பை முடித்து வேலை பார்ப்பவர்கள் பெறும் சம்பளத்தைவிட அதிகளவில் சம்பளம் பெறுவார்கள். அதனால் மாணவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். கொரோனாவுக்குப் பிறகு தளவாடம் சார்ந்த தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. 

  இடங்களை குறைக்க திட்டம் 

என்ஜினீயரிங் படிப்பில் கணிதம் சார்ந்த படிப்புகளை அதிகம் படிக்கவேண்டும். இதற்காக மாணவர்கள் தங்களுடைய கவனத்தை அதில் அதிகம் செலுத்துகிறார்கள். திறனை வளர்த்துக் கொள்வது இல்லை. ஆனால் இந்த தொழிற்கல்வி படிப்புகளில் திறனை மட்டுமே வளர்த்துக்கொள்ளும் வகையில் கற்றுக்கொடுக்கப்பட உள்ளன. சமூகத்தில் தொழிற்கல்வியை பற்றிய தவறான புரிதல் இருக்கிறது. அறிவுசார்ந்த வேலைவாய்ப்புகள் அனைத்தும் இப்போது மென்பொருளில் வடிவமைத்துவிட்டார்கள். எனவே இனிமேல் அந்த அறிவு சார்ந்த வேலைவாய்ப்புகளை எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதற்கு திறன் அவசியம். அவர்களின் தேவைதான் இனி அதிகமாகும். இனிமேல் வரும் ஆண்டுகளில் தொழிற்கல்வியில் அதிக படிப்புகளை அறிமுகம் செய்து, என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடங்களை குறைக்க திட்டமிட்டுள்ளோம். 

  அனுமதி 

டிப்ளமோ என்ஜினீயரிங் படிப்பு முடித்து, தொழில் நிறுவனங்களில் பணியாற்றுவோருக்காக, முழுநேரமாக என்ஜினீயரிங் படிப்பை நடத்தும் வகையில், தமிழகத்தில் 23 என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கு, அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) அனுமதி அளித்துள்ளது. தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் என்ஜினீயரிங் பட்டதாரிகளுக்கு, சில கல்லூரிகள் முழுநேரமாக எம்.இ., மாணவர் சேர்க்கை வழங்கியுள்ளது. இந்த கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதியில்லாமல் எம்.இ., படிப்பு நடத்தும் கல்லூரிகளில் படித்தால் வேலை கிடைக்காது. அந்தப்படிப்பு ரத்து செய்யப்படும். எனவே, மாணவர்கள் அனுமதியில்லாத படிப்புகளில் சேரவேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment