விரைவில் எம்.ஆர்.பி. தேர்வு மூலம் டாக்டர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள் என்றும், காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
டாக்டர்கள் இல்லை
சட்டசபையில் கேள்வி நேரத்தில், பா.ஜ.க. எம்.எல்.ஏ. சரஸ்வதி (மொடக்குறிச்சி), ‘மொடக்குறிச்சி தொகுதி, கொடுமுடி அரசு ஆஸ்பத்திரி, தாலுகா ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்ட போதிலும், அதற்கான அடிப்படை வசதிகள், கட்டமைப்பு வசதி எதுவும் இல்லை. நீண்ட விடுமுறையில் டாக்டர்கள் செல்வதால், நோயாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். எக்ஸ்ரே, ஸ்கேன் வேலை செய்யவில்லை' என்றார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘‘மாவட்ட சுகாதார அலுவலர்களோடு கலந்து பேசி, விடுப்பில் செல்பவர்களுக்கு பதிலாக புதிய டாக்டர்களை அங்கே இட மாற்றம் செய்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். டிஜிட்டல் எக்ஸ்ரே அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அந்த வகையில், கொடுமுடியில் ஒரு புதிய டிஜிட்டல் எக்ஸ்ரே அமைப்பதற்குரிய நடவடிக்கையும், புதிய ஸ்கேன் வசதி ஏற்படுத்தித் தருவதற்குரிய நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்’’ என்றாார்.
நாகப்பட்டினம் எம்.எல்.ஏ. முகம்மது ஷாநவாஸ் (வி.சி.க.), ‘‘நாகப்பட்டினத்தை பொறுத்தளவில் போதிய டாக்டர்கள் இல்லை. இது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. எனவே, உரிய டாக்டர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், டாக்டர்களின் நியமனம் என்பது, விரைவில் எம்.ஆர்.பி. தேர்வு மூலம் தேர்வு செய்யப்படவிருக்கிறது. எனவே காலிப் பணியிடங்களை நிரப்புவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.
ஆம்புலன்ஸ்
பாப்பிரெட்டிபட்டி எம்.எல்.ஏ. கோவிந்தசாமி (அ.தி.மு.க.), ‘‘ஆம்புலன்சுக்கு எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் எழுதிக்கொடுத்தும் கூட, அதற்கு நிதி இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால், எம்.பி.க்கள் நிதியில் இருந்து கொடுக்கிறார்கள். எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும் ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும்' என்றார்.
இதற்கு பதில் அளித்த மா.சுப்பிரமணியன், ‘108 ஆம்புலன்சை பொறுத்த வரைக்கும் 1,333 ஆம்புலன்ஸ் செயல்பாட்டில் இருக்கின்றன. ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய ஆம்புலன்ஸ்களை இயக்கி வைத்திருக்கிறார்.
எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் ஆம்புலன்சு வாங்க விதிமுறைகள் இல்லை. இருந்தாலும், எம்.எல்.ஏ. தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் தந்திருப்பதாக சொல்கிறார். அந்த 25 லட்சம் ரூபாயை வேறு ஒரு பயன்பாட்டிற்கு என கடிதத்தை மாற்றி எழுதித் தருவாரேயானால் அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்றார்.
No comments:
Post a Comment