மாநகராட்சி பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை ஐகோர்ட்டு உத்தரவு - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, October 15, 2023

மாநகராட்சி பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தேர்வு மூலம் நிரப்ப நடவடிக்கை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலியாக உள்ள 499 பணியிடங்களில் 50 சதவீத பணியிடங்களை தேர்வு மூலம் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

  எந்த விதி? 

 பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்கக்கோரி சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் எந்த விதியின்கீழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன என்பது உள்பட பல கேள்விகளை எழுப்பியிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரப்பன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக மாநகராட்சிக்கு என தனி விதிகள் இல்லை. பள்ளிக்கல்வித்துறை விதிகளே பின்பற்றப்படுகின்றன என்று சென்னை மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. 

  காலி பணியிடங்கள் 

 இதுகுறித்து சென்னை மாநகராட்சி தாக்கல் செய்த அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீதத்தை நேரடி தேர்வு மூலம் நிரப்ப வேண்டும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக நேரடி தேர்வு நடத்தப்படவில்லை. தற்போது காலியாக உள்ள 499 ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீத பணியிடங்களை நேரடியாகவும், மீதமுள்ள 50 சதவீத இடங்களை பதவி உயர்வு மூலமாகவும் நிரப்ப வேண்டும். நேரடியாக பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மாநகராட்சி நிர்வாகம் 2 வாரத்துக்குள் கடிதம் எழுதவேண்டும். 

  பணிமூப்பு பட்டியல் 

 மாநகராட்சியின் கடிதம் கிடைத்ததும் போர்க்கால அடிப்படையில் 6 மாதங்களுக்குள் தேர்வு நடவடிக்கைகளை முடித்து, இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி, தேர்வானவர்கள் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை மாநகராட்சிக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதேநேரம், பதவி உயர்வு மூலம் நியமிக்கப்படவேண்டிய 50 சதவீத ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு பணிமூப்பு பட்டியலை மாநகராட்சி 3 மாதங்களுக்குள் தயாரிக்க வேண்டும். விசாரணையை நவம்பர் 23-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.


No comments:

Post a Comment