‘‘நம்மை எங்கேயும் எப்போதும் சூழ்ந்திருக்கும் சிறுசிறு உயிர்களான பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றைப் பற்றிப் படிப்பது, மைக்ரோபயாலஜி எனப்படும் நுண்ணுயிரியல். இந்தப் படிப்புக்கு ஆராய்ச்சி நிலையங்கள், மருத்துவமனைகள், உணவு-மாசு கட்டுப்பாடு, தடயவியல் போன்ற பல துறைகளில் மிகுந்த முக்கியத்துவம் உள்ளது.
குறிப்பாக, மருத்துவ துறையில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் மெடிக்கல் லேப் துறையில் இதன் பங்கு அளப்பரியது’’ என்று முதல் கருத்திலேயே மாணவ-மாணவிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிறார், முனைவர் புவனா ராஜேஷ்.
சென்னையை சேர்ந்தவரான இவர், எம்.எஸ்சி பயோ கெமிஸ்ட்ரி மற்றும் பயோ டெக்னாலஜியில் எம்.பில் மற்றும் பி.எச்டி பட்டம் பெற்றவர். மேலும் பிரபலமான ஆராய்ச்சி நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிவிட்டு, இப்போது சுயமாக உயர்தர மருத்துவ பரிசோதனை நிலையம் ஒன்றை நடத்தி, புதுமையான ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறார். இவர், பயோ கெமிஸ்ட்ரி மற்றும் மைக்ரோ பயாலஜி துறைகள் பற்றியும், அதில் இருக்கும் அற்புதமான வேலைவாய்ப்புகள் பற்றியும் பகிர்ந்து கொள்கிறார்.
‘‘பயோ கெமிஸ்ட்ரி மற்றும் மைக்ரோ பயாலஜி இவ்விரண்டுமே, சுவாரசியமான படிப்புகள்.
ஏனெனில் இவை இரண்டுமே, நம்மை சுற்றியிருப்பவை பற்றி முழுமையாக கற்றுக்கொடுக்கிறது. நம்மைச்சுற்றி இருக்கும் நுண்ணுயிரிகள், அவற்றால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள், அதை எவ்வாறு ஆக்கப்பூர்வச் செயல்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம், நுண்ணுயிரிகள் ஏற்படுத்தும் தீமைகள், அதற்கான அடிப்படை சிகிச்சைகள் மற்றும் அதைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கைகள்... என நுண்ணுயிரிகள் பற்றிய அறிவியல் மற்றும் மருத்துவத் தகவல்களே மைக்ரோ பயாலஜி படிப்பு.
அதேபோல, நாம் பயன்படுத்தும் சோப்பு, அழகு சாதனப் பொருட்கள் முதல் மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் ரசாயனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இப்படி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ரசாயனப் பிரிவின் பயன்பாடுகளை பல்வேறு அறிவியல் படிப்புகளாக படிப்பதுதான், பயோ கெமிஸ்ட்ரி. பெயரளவில் மட்டுமல்ல, இவ்விரண்டு படிப்புகளையும் படிப்பது நிஜத்திலும் சுவாரசியமான அனுபவமாகவே அமையும்’’ என்கிறார், புவனா.
‘‘கொரோனா காலகட்டத்திற்கு முன்புவரை, மைக்ரோ பயாலஜி மற்றும் பயோ கெமிஸ்ட்ரி பற்றிய புரிதல் அதிகமாக இருந்ததில்லை.
ஆனால், கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு பிறகு, இவ்விரு துறையும் அசுர வளர்ச்சி பெற்றிருக்கின்றன. ஏனெனில், கொரோனா வைரஸ் பரிசோதனை, மருந்து தயாரிப்பு, வைரஸ் சம்பந்தமான ஆராய்ச்சி பணிகள்... என எல்லாவற்றுக்கும், இவ்விரு படிப்புகளை படித்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டன. மேலும், சமீபகாலமாக உலகெங்கும் அதிகரித்திருக்கும் ஆராய்ச்சி நிலையங்கள், மருத்துவ தயாரிப்பு நிறுவனங்கள், லேப் ஆகியவற்றிலும் பயோ கெமிஸ்ட்ரி மற்றும் மைக்ரோ பயாலஜி படித்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது’’ என்பவர், சமீபகாலமாக தமிழகத்தில் மேம்பட்டிருக்கும் லேப் தொழில்நுட்பங்கள் பற்றி விளக்குகிறார்.
‘‘உலகளவிலும், இந்திய அளவிலும் லேப் சம்பந்தப்பட்ட தொழில்நுட்பங்கள் படுவேகமாக முன்னேறி கொண்டிருக்கின்றன.
எல்லாமே மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களாக மிளிர்கின்றன. பொதுவாக, எல்லா துறையிலும் உலக தரத்திற்கும், நம் தமிழக தரத்திற்கும் லேசாக வித்தியாசங்கள் தெரியும். ஆனால் மெடிக்கல் லேப் மற்றும் ஆராய்ச்சி துறையில் தமிழகம் என்றுமே சிறந்து விளங்குகிறது. உலக தரத்தோடு போட்டியிடுகிறது. ஒருசில பரிசோதனைகள், வெளிநாடுகளில்தான் செய்யமுடியும் என்ற நிலை இப்போது இல்லை. எல்லாமே, நம் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலேயே செய்ய முடிகிறது. இந்த நவீன அப்டேட்டும், இளம் மாணவ-மாணவிகளுக்கான சூப்பர் வேலைவாய்ப்புகளுக்கு உத்திரவாதம் கொடுக்கிறது.
எல்லா ஊர்களிலும், மெடிக்கல் லேப்கள் நிறைந்திருக்கின்றன. வீட்டிற்கே வந்து ரத்த மாதிரி மற்றும் எக்கோ வரையிலான சோதனைகளை செய்து கொடுக்கும் அளவிற்கு நவீன உபகரணங்கள் வந்துவிட்ட நிலையில், மைக்ரோ பயாலஜி மற்றும் பயோ கெமிஸ்ட்ரி படித்தவர்களுக்கு எதிர்காலத்தில் சிறப்பான வரவேற்பு இருக்கும்’’ என்றவர், மெடிக்கல் லேப்களை தவிர்த்து, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், மருத்துவ கருவி தயாரிப்பு நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு அதிகமாக இருக்கும் என்கிறார்.
‘‘பரிசோதனை ஒருபக்கம் இருந்தாலும், பரிசோதனை சார்ந்த உபகரணங்கள் தயாரிப்பு, மருத்துகள் தயாரிப்பு தொழிற்சாலைகளின் இயந்திர தயாரிப்பு... என பல தளங்களில் வேலைவாய்ப்புகள் நிறைந்திருக்கின்றன. கொரோனாவை போன்று புதுப்புது கொடிய வைரஸ்களை நாம் சந்திக்கும்போது, அதுபற்றி ஆராயவும், தடுப்பு மருந்து தயாரிக்கவும், நிறைய வாய்ப்பிருக்கிறது. அதற்கும், இளைஞர்கள் தயாராக இருக்க வேண்டும்’’ என்றவர், நிறைய மாணவ-மாணவிகளுக்கு அறிவியல் துறை மீதான ஈடுபாட்டை வளர்த்தெடுக்கிறார். அவர்களுக்கு அறிவியல் ஆராய்ச்சி பற்றிய புரிதலை உண்டாக்கி, அறிவியல் துறையோடு ஒன்றி பயணிக்க வழிகாட்டுகிறார். மேலும், உயர் ரத்த சோகை சம்பந்தமாக இவர் மேற்கொண்ட ஆராய்ச்சி கட்டுரைகள், சர்வதேச அரங்கில் வெளியாகி அறிவியல் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, இப்போது பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருகிறார்.
நுண்ணுயிரியல் படிப்புக்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலும் எக்கச்சக்க வேலைவாய்ப்புகள் உள்ளன. இளங்கலை முடித்தவர்கள் தண்ணீர் மற்றும் உணவு தரம் சோதனையாளர், பயோ மெடிக்கல் சயின்டிஸ்ட், மருத்துவ ஆராய்ச்சியாளர் (நோய்கள், அதற்கான மருந்துகளைக் கண்டுபிடித்து வடிவமைத்தல்), தடயவியல் நிபுணர் (விரல் ரேகை சோதனை), டெக்னிக்கல் பிரியூவர், மெடிக்கல் கோடிங் என பிரகாசமான வேலைவாய்ப்புகளைப் பெறலாம். மேற்படிப்பு முடித்தவர்களுக்கு பேராசிரியர் பணிவாய்ப்புகள் உண்டு.
No comments:
Post a Comment