‘நல்ல இமேஜை’ வளர்த்துக்கொள்ளுங்கள்..! - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, October 28, 2023

‘நல்ல இமேஜை’ வளர்த்துக்கொள்ளுங்கள்..!


தன்னைப் பற்றி மற்றவர்கள் நல்ல அபிப்ராயம் கொண்டிருக்க வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமாகவும் இருக்கிறது. அதற்கேற்ப நாம் நடந்து கொள்கிறோமா? என்பதை நாம்தாம் தீர்மானிக்க வேண்டும். ஏனெனில் நாம் பேசும் விதம், நம்முடைய செயல்பாடுகளை வைத்துத்தான் பிறர் நம்மை மதிப்பீடு செய்வார்கள். அதைப்பற்றி எதுவும் கவலைப்படாமல் நம் இஷ்டத்திற்கு நடந்து கொண்டுவிட்டு, பிறகு இமேஜ் பாழாகிவிட்டதே என்று கவலைப்படுவதில் அர்த்தமில்லை. மறுபடியும் அவர்கள் மத்தியில் நல்ல இமேஜை உருவாக்குவது ரொம்ப கஷ்டம். சிலர் ‘தான் பேசுவது தான் நியாயம்’ என்று நினைத்துக்கொண்டு வாய்க்கு வந்தபடி பேசிவிடுவார்கள். 

அவர்களுடைய பேச்சில் இருக்கும் நிறை, குறைகளை மற்றவர்கள் சுட்டிக்காட்டினால் அதனை ஏற்றுக்கொள்ள முன்வரமாட்டார்கள். தன்மீது பொறாமை கொண்டு விமர்ச்சிப்பதாக தங்களை தாங்களே சமாதானம் செய்து கொள்வார்கள். நம்மைப் பற்றி தவறான கருத்தை நாம் தான் மற்றவர்கள் மனதில் பதிவு செய்திருக்கிறோம் என்பதையாவது புரிந்துகொள்ளவேண்டும். ‘நான் இப்படித்தான் இருப்பேன்’ என்று தன்னை பற்றி தானே மதிப்பீடு செய்து ஒரு இமேஜை ஏற்படுத்திக்கொள்வது சுலபம். ஆனால் அதை மாற்றுவது கஷ்டம். நாம் மற்றவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும் இமேஜ் ஒன்றாக இருக்கும். அதை வைத்து அவர்களாகவே உருவாக்கிக்கொள்ளும் இமேஜ் வேறாக இருக்கும். அது உன்னதமானதாகவும் இருக்கலாம். மிக மோசமானதாகவும்கூட இருக்கலாம். அவர்கள் எப்படி மதிப்பீடு செய்து வைத்திருக்கிறார்களோ அந்த கண்ணோட்டத்துடன்தான் நம்மிடம் பழகுவார்கள். 

 அவர்களை குறை சொல்லி எந்த பயனும் இல்லை. நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளுக்கு நாம் தான் காரணம் என்பதை புரிந்துகொண்டால் மன வருத்தத்தையும், கோபத்தையும் தவிர்க்கலாம். நம்மீது மற்றவர்கள் கொண்டிருக்கும் அபிப்ராயத்தை மாற்றவும் முயற்சிக்கலாம். சமூகத்தின் பார்வையில் நம்முடைய இமேஜ் எவ்வாறு மதிப்பீடு செய்யப்படுகிறது என்பதை நாம்தான் முடிவு செய்கிறோம். முக்கியமாக நம்முடைய வார்த்தைகள் தான் இமேஜை தீர்மானிக்கின்றன. மற்றவர்களிடம் எப்படி பேசுகிறோம், எந்த மாதிரியான வார்த்தைகளை உச்சரிக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நம்முடைய இமேஜ் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் வார்த்தைகள் தானாக கட்டுக்குள் வரும். நிதானமாக யோசித்து வார்த்தைகளை உச்சரிப்பதற்கு முயற்சிப்போம். அப்படி வார்த்தைகளில் கடுமை காட்டாமல் இன்முகத்துடன் மற்றவர்களிடம் பேசிப் பழகும் சுபாவம் உருவாகும். 

நாளடைவில் அதுவே வழக்கமாகவும் மாறிவிடும். நம்முடைய சொல்லும், செயலும் மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி அமையும்போது நிரந்தரமாக நல்ல இமேஜை ஏற்படுத்தி விடலாம். அதற்கு எப்போதும் நல்ல வார்த்தைகளை பேசிப் பழக வேண்டும். ஒருபோதும் கோபத்தில் வார்த்தைகளை கொட்டிவிடக்கூடாது. அது நமது இமேஜை நாசப்படுத்திவிடும். கோபத்திற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். கோபம் எதைப்பற்றியும் யோசிக்க வைக்காது. தன் போக்கிற்கு மனதை இழுத்து சென்று பிரச்சினைக்கு வழிவகுத்துவிடும். அதனால் பாதிக்கப்பட்ட இமேஜை நிலை நிறுத்த பல வருடங்கள் போராட வேண்டியிருக்கும்.

No comments:

Post a Comment