பிளஸ்-2 பொதுத்தேர்வு: விடுப்பில் இருக்கும் மாணவரை நீக்க அனுமதி பெற வேண்டும் அரசு தேர்வுத்துறை உத்தரவு
ஒவ்வொரு ஆண்டும் பிளஸ்-2 பொதுத்தேர்வின்போது மாணவர்கள் பலர் ‘ஆப்சென்ட்’ ஆகும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் பெரும்பாலான மாணவர்கள் மாற்றுச்சான்றிதழ் வாங்காமல், நீண்ட நாட்கள் பள்ளிகளில் எந்த பதிலும் தெரிவிக்காமல் விடுப்பில் இருந்தவர்களாகவே இருந்தனர். அந்த மாணவர்களின் பெயரை நீக்காமல், அவர்களுக்கும் ‘ஹால் டிக்கெட்’ வழங்கப்பட்டதால் இந்த பிரச்சினை வந்தது.இந்த நிலையில் இதனை சரிசெய்யும் விதமாக அரசு தேர்வுத்துறை பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பதிவெண், பெயர் உள்ளிட்ட விவரங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
மேலும் மாற்றுச்சான்றிதழ் பெறாமல், நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவ-மாணவிகளின் பெயரை நீக்க வேண்டும் என்றால், அதனை தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ள சில விவரங்கள் வருமாறு:-
2023-24-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் 2023 மார்ச் மாதம் தேர்வு எழுதிய பிளஸ்-1 வகுப்பு மாணவர்களின் பெயர் பட்டியலை கொண்டே தயார் செய்யப்பட உள்ளது. மாணவரின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலம், புகைப்படம், பிறந்ததேதி ஆகியவற்றில் திருத்தம் இருந்தால் எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் இணைத்து வருகிற 10-ந்தேதிக்குள் மாவட்ட அரசுத்தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
அதன் அடிப்படையிலேயே திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதி, நீண்ட நாட்கள் விடுப்பில் இருந்து, மாற்றுச்சான்றிதழ் வழங்கப்படாத மாணவரின் பெயரை பிளஸ்-2 பொதுத்தேர்வு பட்டியலில் இருந்து நீக்கம் செய்யக்கூடாது. அவ்வாறு மாற்றுச்சான்றிதழ் பெறாமல், நீண்ட நாட்கள் விடுப்பில் இருக்கும் மாணவரின் பெயரை கட்டாயம் நீக்க வேண்டும் என்றால், முதன்மை கல்வி அலுவலரின் ஒப்புதல் கடிதத்துடன் உதவித்தேர்வு இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment