2023 தீபாவளி Special 23 வகை ஸ்வீட் ரெசிபி - துளிர்கல்வி

Latest

Search This Site

Saturday, November 11, 2023

2023 தீபாவளி Special 23 வகை ஸ்வீட் ரெசிபி

2023 தீபாவளி Special 23 வகை ஸ்வீட் ரெசிபி

பூந்தி ......

தேவை
கடலை மாவு - 1 கப்,
சர்க்கரை - 1 கப்,
உப்பு - 1 சிட்டிகை,
நெய், எண்ணெய் - சிறிதளவு,
முந்திரிப் பருப்பு - 10,
கிஸ்மிஸ் - 20,
டைமண்ட் கல்கண்டு - 1 டேபிள்ஸ்பூன்,
கிராம்பு - 3,
ஏலக்காய் - 3,
பாதாம் - 4,
மஞ்சள் கலர் - சிறிதளவு.

செய்முறை:

முதலில் கடலை மாவில் சிட்டிகை உப்பு, நெய் சேர்த்து, தேவையான நீர் கலந்து தோசைமாவு பதத்திற்குக் கரைத்துக்கொள்ளவும்.
பின்பு அடுப்பில் வாணலியில் எண்ணெய் காயவைத்து, அதன்பின் பூந்திக் கரண்டி அல்லது துளைகள் உள்ள வேறு ஏதாவது பாத்திரத்தின் உட்புறமாக சிறிது நெய் தடவிவிட்டு, காய்ந்த எண்ணெய்க்கு நேராகப் பிடித்து, மாவை சிறிதுசிறிதாக விட்டால் முத்துமுத்தாக விழ ஆரம்பிக்கும வாணலியில் பூந்தி விழுந்ததும், திருப்பிவிட்டு வேகவிடவும்.வெந்ததும் தனியே எடுத்து வைக்கவும்.சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சி கெட்டியாகாமல் இறக்கிவிடவும்.இறக்குமுன், ஏலப்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி, கிஸ்மிஸ், ஒன்றிரண்டாக உடைத்த கிராம்பு, மஞ்சள் நிறம் சேர்த்துவிடவும். பாகில் டைமண்ட் கல்கண்டு, பூந்தியைக் கலக்கவும். பாதாமை துருவி சேர்க்கவும்.
சுவையான  பூந்தி ரெடி.


குலாப் ஜாமூன்

தேவை
பால் பவுடர் - 2 1/2 கப்
பால் - தேவையான அளவு (கலப்பதற்கு)
நெய் (அ) டால்டா - 2 மேசைக்கரண்டி
சர்க்கரை - 5 கப்
பேக்கிங் பவுடர் - சிறிது
மைதா மாவு - 2 மேசைக்கரண்டி
நெய் (அ) எண்ணெய் - அரை கப் (பொரிப்பதற்கு)

செய்முறை :

பால் பவுடருடன் மைதா மாவு, பேக்கிங் பவுடர், நெய் (அ) டால்டா சேர்த்து, தேவைக்கேற்ப பால் சேர்த்து பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.ஒரு பாத்திரத்தில் 5 கப் சர்க்கரையைப் போட்டு, அத்துடன் 5 கப் தண்ணீர் ஊற்றிக் கரைத்து அடுப்பில் வைத்து ஒரு கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும்.மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து நெய் அல்லது எண்ணெய் ஊற்றிக் காயவிடவும். காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு சிவக்க பொரித்தெடுத்து சர்க்கரைப் பாகில் போடவும். அனைத்து உருண்டைகளையும் போட்ட பிறகு, 5 நிமிடங்கள் கழித்து பாகு இருக்கும் அடுப்பை அணைக்கவும்.டேஸ்டி குலாப் ஜாமுன் ரெடி. குறைந்தது 3 - 4 மணி நேரம் வரை குலாப் ஜாமூன் பாகில் ஊற வேண்டும்


பாம்பே அல்வா

தேவை
வெள்ளை சோள மாவு - 1 கப்
சர்க்கரை - 2 கப்
நெய் - 1/4 கப்
முந்திரி, பாதாம் நறுக்கியது - 1 மேசைக்கரண்டி
எலுமிச்சை சாறு. - 1 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
கேசரி பவுடர் - 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் சோள மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் 2கப் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து வைக்கவும்.
பின்னர் அதில் கேசரி பவுடர் சேர்த்து நன்கு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.பின்பு ஒரு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து, 2 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.பின் எலுமிச்சை சாறு சேர்க்கவும். எலுமிச்சை சாறு சர்க்கரை பாகு கெட்டியாகாமல் பார்த்துக் கொள்ளும்.சர்க்கரையானது நன்கு கரைந்து, சர்க்கரை பாகு ரெடியானதும், அதில் கலந்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து குறைந்த தீயில் தொடர்ந்து கிளறி விட வேண்டும். இடையிடையே சிறிது நெய் சேர்த்து கைவிடாமல் கிளறவும். அப்படி கிளறி விடும் போது, ஆங்காங்கு கெட்டியாக ஆரம்பித்து, நெய் கசிந்து அல்வா போன்று வர ஆரம்பிக்கும்.அப்போது அதில் நெய் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு அல்வா பதம் வரும் வரை கிளறி, பின் அதில் முந்திரியை சேர்த்து கிளறி இறக்கவும். அல்வா பதம் என்பது அல்வாவில் இருந்து நெய் கசிந்து பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும் போது ஒரு தட்டில் பரப்பி, ஒரு மணிநேரம் கழித்து, பாதாமை தூவி அதனை துண்டுகளாக்கினால் சுவையான பாம்பே அல்வா ரெடி.

லட்டு

தேவையானவை: 

கடலை மாவு - 200 கிராம், சர்க்கரை - 350 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, முந்திரி, திராட்சை - தலா 20, லவங்கம் - 8, டைமண்ட் கல்கண்டு - 15, பச்சைக் கற்பூரம் - ஒரு சிட்டிகை, முழு ஏலக்காய் - 5, பால் - ஒரு டீஸ்பூன், கேசரி கலர் - சிறிதளவு.

செய்முறை: 

சர்க்கரையில் 50 மில்லி நீர்விட்டு சூடாக்கவும். கொதிக்கும்போது பால் விட்டு அழுக்கு நீக்கி, கேசரி கலர் சேர்த்து பாகு காய்ச்சி இறக்கவும். கடலை மாவை நீர்விட்டு பஜ்ஜி மாவு போல் கெட்டியாக கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, மாவை லட்டு தேய்க்கும் கரண்டியில் விட்டு எண்ணெயில் விழும்படி தேய்த்து, முத்து முத்தாகப் பொரித்து பாகில் சேர்க்கவும். முந்திரி, திராட்சை, லவங்கம் இவற்றை பொரித்து முழு ஏலக்காய், டைமண்ட் கல்கண்டு, பச்சைக் கற்பூரம் சேர்த்து, சர்க்கரை பாகு - பூந்தி கலவையில் கொட்டிக் கிளறவும். கை பொறுக்கும் சூட்டில் லட்டு பிடிக்கவும்.

குறிப்பு: கடலைப்பருப்பை வெயிலில் காயவைத்து, மெஷினில் அரைத்தால்தான் லட்டு சூப்பர் சுவையில் அசத்தும். செய்து வைத்த பாகு உறைந்து கெட்டியாகிவிட்டால் கவலை வேண்டாம். லேசாக சுடவைத்தும் லட்டு பிடிக்கலாம்.

அதிரசம்..

தேவை
பச்சரிசி - 2 கப்
வெல்லம் - 1 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1/4 ஸ்பூன்
சுக்குத்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

முதலில் பச்சரிசியை ஒரு மணிநேரம் ஊறவிட்டு வடித்து 20 நிமிடங்கள் உலர விட வேண்டும். பின் இதனை நைசாக அரைத்து சலித்துக் கொள்ள வேண்டும் . கடாயில் சர்க்கரையுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி பின் பாகு காய்த்துக் கொள்ள வேண்டும் . பின் இதனுடன் சுக்குத்தூள் , ஏலக்காய் தூள் , நெய் சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கி , அரிசி மாவு சேர்த்து கிளற வேண்டும் . இந்த மாவை ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்தலாம் . இந்த மாவை அதிரசமாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சூப்பரான அதிரசம் தயார் !

குறிப்பு : 

பச்சரிசி கொஞ்சம் குண்டு அரிசியாக பார்த்து வாங்க வேண்டும் . பாகு, கம்பி பதத்திற்கு முந்தைய நிலையில் இருக்க வேண்டும்.

கடலைப்பருப்பு சுய்யம்

தேவையானவை: கடலைப்பருப்பு (மெத் தென்று வேகவிட்டது) - 100 கிராம், பாகு வெல்லம் - 100 கிராம், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், முந்திரித்தூள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ
மேல்மாவுக்கு: மைதா மாவு - 75 கிராம், அரிசி மாவு - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு, சமையல் சோடா - ஒரு சிட்டிகை.

செய்முறை: 

வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கொதிக்கவிட்டு வடிகட்டவும். கடலைப் பருப்பு, தேங்காய்த் துருவல், வெல்லக் கரைசல் ஆகியவற்றை மிக்ஸியில் மைய அரைத்து ஏலக்காய்த்தூள், முந்திரித்தூள் சேர்த்து எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டவும். மேல் மாவுக்கான பொருட்களை, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைக்கவும். எண்ணெயை சூடாக்கி, பூரண உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்து பொரித்தெடுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).

தேங்காய் சுகியன்

தேவையானவை: தேங்காய்த் துருவல் - ஒரு கப், வெல்லம் - முக்கால் கப், நெய் - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு.
மேல் மாவுக்கு: தண்ணீர் விட்டு களைந்து, நிழலில் உலர்த்தி அரைத்த பச்சரிசி மாவு - 100 கிராம், உளுத்தமாவு - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: வெல்லத்தில் சிறிதளவு நீர்விட்டு கரைத்து, கொதிக்கவிட்டு, வடிகட்டி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நெய், அரிசி மாவு சேர்த்து பூரணமாக கிளறி இறக்கி, எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். மேல் மாவுக்கு கொடுத்துள்ள பொருட்களை கலந்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு போல் கரைத்துக்கொள்ளவும். பூரண உருண்டைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும்.
குறிப்பு: அதிக சூட்டில் பொரித்தால், பூரணம் கரைந்து எண்ணெயில் சிதறிவிடும்.

டெசிகேட்டட் கோகோனட் பர்ஃபி

தேவையானவை: டெசிகேட்டட் கோகோனட் (உலர்ந்த தேங்காய்த் துருவல் - டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) - 200 கிராம், சர்க்கரை - 300 கிராம், பால் பவுடர் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, நெய் - 100 கிராம்.
செய்முறை: ஏலக்காய்த்தூள் தவிர பிற பொருட்களை ஒன்றாக சேர்த்து வாணலியில் போட்டு, நன்றாக கரைந்து சுருள பூத்து வரும்போது ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டில் கொட்டி சமன்படுத்தவும். சற்று சூடாக இருக்கும்போதே வில்லைகள் போடவும். பால் பவுடர் சேர்ப்பதனால் இந்த பர்ஃபி மிருதுவாகவும் அதிக வெள்ளையாகவும் இருக்கும்.
இதை 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

மைசூர்பாகு

தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், சர்க்கரை - 300 கிராம், நெய் - 200 கிராம் (வெண்ணெயைக் காய்ச்சி பயன்படுத்தினால் சுவை கூடும்).
செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரையுடன் 50 மில்லி தண்ணீர் சேர்த்துக் கரையவிடவும். வேறொரு அடுப்பில் நெய்யை சூடாக்கிக்கொள்ளவும். சர்க்கரை கரைந்து முத்து பாகு பதம் வந்தவுடன் ஒரு கை கடலை மாவு, சிறிது சூடான நெய் என ஒன்று மாற்றி மாற்றி சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கவும். கலவை பூத்து (பொற பொற என்று) வருகையில் இறக்கி, நெய் தடவிய டிரேயில் கொட்டி, சிறிது சூடாக இருக்கையில் வில்லைகள் போடவும்.

குறிப்பு: கலவையில் சிறிது சமையல் சோடா சேர்த்தால், கூடு கூடாக (தேன் கூடுபோல்) மைசூர்பாகு வரும்.

பாம்பே காஜா

தேவையானவை: மைதா மாவு - 150 கிராம், சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - கால் கிலோ, கலர் கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, கேசரி கலர் - சிறிதளவு.
செய்முறை: மைதா, உப்புடன் நீர் சேர்த்து கெட்டியாக பூரி மாவு போல் பிசைந்து மெல்லியதாக சிறிய அப்பளம் போல் இடவும். இதை பாதியாக மடித்து, மீண்டும் அதை பாதியாக மடித்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் விட்டு, இரட்டை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, கேசரி கலர், ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். பொரித்த காஜாவை இதில் அழுத்தி தோய்த்து எடுத்து தட்டில் வைத்து, கலர் கொப்பரை தூவவும்.

மோகன் தால்

தேவையானவை: கடலை மாவு - 100 கிராம், சர்க்கரை - 200 கிராம், சர்க்கரையில்லாத கோவா - 50 கிராம், நெய் - முக்கால் கப், வறுத்த முந்திரி - சிறிதளவு, குங்குமப்பூ - சில இதழ்கள்
செய்முறை: நெய்யை சூடாக்கி கடலை மாவு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வறுத்து, கோவாவை உதிர்த்து சேர்க்கவும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு ஒரு கம்பி பதத்தில் பாகு காய்ச்சி... கடலை மாவு - கோவா கலவையை சேர்த்து நன்கு கிளறவும். ஓரங்களில் ஒட்டாது வரும்போது இறக்கி, நெய் தடவிய தட்டில் கொட்டி, வறுத்த முந்திரி, குங்குமப்பூவால் அலங்கரித்து விரும்பிய வடிவில் வில்லைகள் போட... மோகன் தால் ரெடி!
குறிப்பு: செய்முறை மைசூர்பாகு போல் இருப்பினும், கோவா சேர்ப்பதனால் மிகவும் சாஃப்ட்டாக இருக்கும் மோகன் தால்.

கோதுமை அல்வா

தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், சர்க்கரை - ஒன்றரை கப், கேசரி கலர் - சிறிதளவு, நெய் - 100 கிராம், எண்ணெய் - 3 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி, வெள்ளரி விதை - தலா ஒரு டீஸ்பூன், பால் - ஒரு கப்
செய்முறை: நெய் - எண்ணெயை ஒன்றுசேர்க்கவும். கோதுமை மாவுடன் கேசரி கலர், பால், சிறிதளவு நீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். சர்க்கரையில் அரை கப் நீர்விட்டு கரைத்து கொதிக்கவிடவும். நுரை பொங்கி வருகையில் கரைத்த கோதுமை மாவு சேர்த்து கைவிடாது கிளறவும். அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவைவிட்டுக் கிளறி, ஒட்டாத பதம் வரும்போது இறக்கி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, நெய் தடவிய தட்டி கொட்டி, மேலே வறுத்த முந்திரி, வெள்ளரி விதையால் அலங்கரிக்கவும். ஆறியபின் துண்டுகள் போடவும்.

தேன்குழல்

தேவையானவை: பச்சரிசி (தண்ணீரில் கழுவி, நிழலில் உலர்த்தியது) - 400 கிராம், முழு உளுந்து - 100 கிராம் (சிவக்க வறுக்கவும்), சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - அரை கிலோ.

செய்முறை: அரிசியுடன் வறுத்த உளுந்து சேர்த்து மெஷினில் கொடுத்து அரைத்து சலிக்கவும். மாவுடன் உப்பு, பெருங்காயத்தூள், சீரகம், ஒரு கரண்டி சூடான எண்ணெய் விட்டு, சிறிதளவு நீரும் சேர்த்துப் பிசைந்து, தேன்குழல் பிடியில் போட்டு சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும்.

பாதாம் டிலைட்

தேவையானவை: மைதா மாவு - 200 கிராம், பாதாம் துருவல் - 100 கிராம் (தோல் நீக்கி துருவியது), பொடித்த சர்க்கரை - 75 கிராம், கொப்பரைத் துருவல் - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய் - அரை கிலோ, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: மைதா, உப்பு, நெய் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, நீர்விட்டு, சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசையவும். பாதாம் துருவல், தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், பொடித்த சர்க்கரை ஆகியவற்றை நன்கு கலந்து பூரணம் தயாரிக்கவும். பிசைந்த மைதாவை சிறிய பூரிகளாக இட்டு நடுவில் ஒரு டீஸ்பூன் பாதாம் பூரணம் வைத்து நன்கு குவித்து உருட்டி, மீண்டும் பூரியாக இட்டு, சூடான எண்ணெயில் (மிதமான தீயில்) பொரித்து எடுக்கவும்.

ஜாங்கிரி

தேவையானவை: முழு உளுந்து - 200 கிராம், அரிசி - ஒரு டீஸ்பூன், சர்க்கரை - 300 கிராம், கேசரி கலர் அல்லது மஞ்சள் ஃபுட் கலர் - சிறிதளவு, ஏலக்காய் எசன்ஸ் அல்லது ரோஸ் எசன்ஸ் - சில துளிகள், சீவிய முந்திரி - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை: உளுந்தை களைந்து அரிசியுடன் அரை மணி ஊறவிட்டு கிரைண்டரில் பொங்க பொங்க அரைத்து (கெட்டியாக), ஃபுட் கலர் சேர்க்கவும். சர்க்கரையுடன், அது கரையும் அளவு நீர் விட்டு, பிசுக்கு பதத்தில் பாகு காய்ச்சி, அகலமான பேசின் அல்லது தாம்பாளத்தில் ஊற்றி, எசென்ஸ் சேர்க்கவும்.

துணி / பால் கவரில் சிறிய துளையிட்டு மாவு நிரப்பி, சூடான எண்ணெயில் ஜாங்கிரியாக பிழிந்தெடுத்து, ரெடியாக இருக்கும் சர்க்கரைப் பாகில் சேர்த்து, 10 நிமிடம் ஊறிய பின் எடுத்துவிடவும். சீவிய முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.

ரவா லாடு

தேவையானவை: வறுத்துப் பொடித்த ரவை - கால் கிலோ, பொடித்த சர்க்கரை - கால் கிலோ, நெய் - 200 கிராம், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு.
செய்முறை: நெய் தவிர பிற பொருட்களை கலந்து, நெய்யை உருக்கி சூடாக விட்டு உருண்டைகள் பிடிக்கவும்.

டூ இன் ஒன் லட்டு

தேவையானவை: பொட்டுக்கடலை மாவு - 100 கிராம், பாசிபருப்பு - 100 கிராம் (வறுத்து அரைக்கவும்), பால் பவுடர் - 50 கிராம், பொடித்த சர்க்கரை - 200 கிராம், நெய் - 150 கிராம், வறுத்த முந்திரி - சிறிதளவு, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
செய்முறை: நெய் தவிர மற்ற பொருட்களை நன்கு கலந்து, நெய்யை உருக்கி சூடாக விட்டு விரும்பிய அளவில் லட்டுகள் பிடிக்கவும்.

பாதுஷா

தேவையானவை: மைதா - 200 கிராம், சர்க்கரை - 300 கிராம், உப்பு, சமையல் சோடா - தலா ஒரு சிட்டிகை, எண்ணெய் - கால் கிலோ, நெய் - ஒன்றரை டீஸ்பூன், பால் - ஒரு டீஸ்பூன், கலர் கொப்பரை துருவல் - சிறிதளவு, ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்.
செய்முறை: உப்பு, சமையல் சோடாவை ஒன்றரை டீஸ்பூன் நெய்யில் நன்கு நுரைக்க தேய்த்து, இதில் மைதா மாவு, சிறிதளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, பெரிய எலுமிச்சை அளவு மாவு எடுத்து, தட்டி, சூடான எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்தெடுக்கவும். சர்க்கரையில் 50 மில்லி நீர் விட்டு சூடாக்கி, நுரைக்கையில் பால் விட்டு அழுக்கு நீக்கவும். பிசுக்கு பதத்துக்கு பாகு வந்ததும் எசன்ஸ் சேர்த்து இறக்கவும். பொரித்த பாதுஷாவை பாகில் முக்கி எடுத்து, கலர் கொப்பரை துருவல் தூவவும். கலர் கொப்பரை கிடைக்காவிட்டால் முழு முந்திரியை சீவி அலங்கரிக்கலாம்.

பாதாம் மில்க் அல்வா

தேவையானவை: பாதாம் பருப்பு - 100 கிராம், பால் - 100 மில்லி, சர்க்கரை - 150 கிராம், பாதாம் எசன்ஸ் - சில துளிகள், மஞ்சள் ஃபுட் கலர் - அரை சிட்டிகை, நெய் - 50 கிராம்.
செய்முறை: பாலை கொதிக்கவிட்டு, ஆறவைக்கவும். பாதாம் பருப்பை 2 மணி நேரம் ஊறவிட்டு, தோல் நீக்கி, பாலுடன் சேர்த்து விழுதாக அரைக்கவும். அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து பாதாம் - பால் விழுது, சர்க்கரை, ஃபுட் கலர் சேர்த்து கரையவிடவும். அவ்வப்போது நெய் சேர்த்துக் கிளறி, கலவை ஒட்டாத பத்தில் வரும்போது பாதாம் எசன்ஸ் சேர்த்து இறக்கவும்
குறிப்பு: அளவு அதிகமாக தேவைப் பட்டால், சிறிதளவு வறுத்த வேர்க்கடலை யையும் பாலுடன் ஊறவிட்டு அரைத்து சேர்த்துச் செய்யலாம்.

பந்தர் லட்டு 

தேவையானவை: கடலை மாவு - 200 கிராம், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், நெய் - 100 கிராம், பொடித்த சர்க்கரை - 150 கிராம், எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி - சிறிதளவு, உப்பு - ஒரு சிட்டிகை

செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து, நீர் விட்டு பிசைந்து முறுக்கு அச்சில் போட்டு, சூடான எண்ணெயில் பிழியவும். முக்கால் பாகம் வெந்து வருகையில் எடுத்து ஆறவிட்டு மிக்ஸியில் பொடி செய்யவும். நெய்யை சூடாக்கி பொடித்த சர்க்கரை, ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, பொடித்த முறுக்கு சேர்த்துக் கலந்து, உருண்டை பிடிக்கவும்
.
ஆந்திராவில் உள்ள பந்தர் எனும் ஊர் இந்த லட்டுக்கு மிகவும் பிரசித்தம் பெற்றது.

டிரை ஃப்ரூட் அல்வா

தேவையானவை: விதை நீக்கிய பேரீச்சை - 100 கிராம், கர்ஜூர் - 8 (விதை நீக்கியது), நெய் - 100 கிராம், எண்ணெய் - 50 மில்லி, சர்க்கரை - 250 கிராம், டூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம், முந்திரி, திராட்சை - தலா 25 கிராம், வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்.

செய்முறை: பேரீச்சை, கர்ஜூர் இரண்டையும் முதல் நாள் இரவே மூழ்கும் அளவு நீர் விட்டு ஊறவைத்து, மறுநாள் அந்த நீருடன் நைஸாக அரைக்கவும். நெய் - எண்ணெயை ஒன்றாக சேர்க்கவும். வாணலியில் சர்க்கரை, அரைத்த விழுது சேர்த்து கிளறவும் (முதலில் அது இளகும். பயப்பட வேண்டாம்). அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவை சேர்த்து நன்கு கிளறவும். ஒட்டாமல் வரும்போது முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து இறக்கவும்.

அசோகா

தேவையானவை: பாசிப்பருப்பு (மசிய வேகவிட்டது) - 100 கிராம், கோதுமை மாவு - 2 டேபிள்ஸ்பூன், சர்க்கரை - 200 கிராம், நெய் - 100 கிராம், ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை, வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு, பால் பவுடர் - 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை: சிறிதளவு நெய்யில் கோதுமை மாவை சிவக்க வறுத்து, பால் பவுடர் சேர்த்து வைத்துக்கொள்ளவும். அடிகனமான வாணலியில் சர்க்கரையை சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு, கரைந்தவுடன் வேகவைத்த பாசிப்பருப்பு, கோதுமை மாவு கலவையைச் சேர்த்து நன்கு கிளறவும். ஒட்டாமல் இருக்க நெய் ஊற்றிக்கொண்டே கிளறவும். கலவை திரண்டு வரும்போது ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்க்கவும். நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.

நவதானிய அப்பம்

தேவையானவை: நவதானிய மாவு - ஒரு கப், ரவை - ஒரு கப், ஆச்சி பாதாம் மிக்ஸ் - 2 டேபிள்ஸ்பூன், பால் - ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு.
செய்முறை: நவதானிய மாவு, ரவை, சர்க்கரை, பால் எல்லாவற்றையும் கட்டி இல்லாமல் கரைத்து, அத்துடன் ஆச்சி பாதாம் மிக்ஸ் பவுடரையும் கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு, ஆப்பச்சட்டியில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, மாவு விட்டு சின்னச் சின்ன அப்பங்களாக சுட்டு எடுத்து, மேலே சிறிதளவு சர்க்கரை தூவிப் பரிமாறவும்.
அப்பம் சாஃப்ட்டாக இருக்க வேண்டு மானால், ஒரு வாழைப்பழத்தை மசித்து மாவில் சேர்க்கலாம்

No comments:

Post a Comment