அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு எழுத்து, நேர்முகத் தேர்வு ஆகியவற்றை நடத்தி தகுதியானவர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தேர்வு செய்து அரசுக்கு வழங்கி வருகிறது.
இந்த பணியிடங்களுக்கான விவரங்களுடன், அதற்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பை ஒவ்வொரு ஆண்டும் அட்டவணையாக டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிடும். இதனை அடிப்படையாக கொண்டு, இதற்காக படித்துக் கொண்டிருக்கும் தேர்வர்கள், அந்தந்த பணியிடங்களுக்கு தங்களை தயார்ப்படுத்தி கொள்வார்கள்.
அந்த வகையில் 2023-ம் ஆண்டுக்கான அட்டவணை கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. 2024-ம் ஆண்டுக்கான போட்டித் தேர்வு, காலிப் பணியிடங்கள் அடங்கிய அட்டவணை எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பில் தேர்வர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அவர்களுடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், 2024-ம் ஆண்டுக்கான அட்டவணையும் அடுத்த மாதம் 2-வது வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாகவும், அதில் 30 வகையான போட்டித் தேர்வுகள் மூலம் 15 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்புகள் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே இந்த ஆண்டு நடத்தப்பட்ட குரூப்-1, குரூப்-2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான முடிவுகளுக்கு தேர்வர்கள் காத்திருந்த நிலையில், அவர்களுக்கு அடுத்த மாதம் (டிசம்பர்) தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment