அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள 86 மருத்துவ இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் தமிழக அரசு அறிவிப்பு - துளிர்கல்வி

Latest

Search This Site

Wednesday, November 1, 2023

அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள 86 மருத்துவ இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் தமிழக அரசு அறிவிப்பு

அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள 86 மருத்துவ. இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது. 

  மருத்துவப் படிப்பு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான மருத்துவப் படிப்பு கலந்தாய்வு நடந்து முடிந்தது. 2021-22-ம் கல்வியாண்டுக்கு முன்பு வரை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் இடங்களில் காலியாக இருந்தால், மீண்டும் அந்தந்த மாநில அரசுகளுக்கே வழங்கப்பட்டு அந்த இடங்கள் நிரப்பப்படும். ஆனால் 2021-22-ம் கல்வியாண்டு முதல் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் நிரப்பப்படாத இடங்கள் மாநில அரசுக்கு வழங்கப்படாது என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டது. இந்த நடைமுறை வந்ததில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத எம்.பி.பி.எஸ். இடங்கள் யாரும் உபயோகம் இல்லாமல் அப்படியே கிடப்பில் கிடந்து வந்தன. 

  காலியாக உள்ள 86 இடங்கள் அந்த வகையில் நடப்பாண்டில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 16 இடங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 50 இடங்களும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 இடங்களும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துக்குட்பட்ட சுயநிதி கல்லூரிகளில் 17 இடங்களும் என மொத்தம் 86 இடங்கள் காலியாக இருந்தன. இவ்வளவு இடங்கள் யாருக்கும் பயன்படாமல் போவதை பார்த்து கல்வியாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர். தமிழக அரசின் சார்பில், முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியாவுக்கு இதுதொடர்பாக கடிதமும் எழுதினார். 

  கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் உள்ள தமிழ்நாட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியாவுக்கு எழுதிய நேர்முக கடிதத்தின் அடிப்படையில் 86 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தி நிரப்பப்படும். அதன்படி, வருகிற 7-ந்தேதி வரை அகில இந்திய கலந்தாய்வும், 7-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை மாநில ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும் நடைபெறும். எனவே மாணவர்கள் tnmedicalselection.org என்ற இணையதளத்தை தொடர்ந்து பார்வையிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment