பொதுத்தேர்வு அட்டவணை எப்போது வெளியிடப்படும்? என்பதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்தார்.
அறிமுக கூட்டம்
பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளராக குமரகுருபரன் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து துறை சார்ந்த அறிமுக கூட்டம் சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்புகள் என்ன? அதன் தற்போதைய நிலை என்ன?, மேலும் நடப்பு விவகாரம் எதுவும் இருக்கிறதா? என்பது குறித்தும் பேசப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், பொதுத்தேர்வு சம்பந்தமாகவும், அந்த தேர்வு சமயத்தில் வரும் போட்டித்தேர்வுகளால் பொதுத்தேர்வு பாதிக்கப்படாத வகையில் அட்டவணை தயாரிப்பது ஆகியவை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். இதுதவிர குரூப்-4 தேர்வு மூலம் பள்ளிக்கல்வித் துறையில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணியிடங்களில் நியமிக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டது.
செயலி தொடக்கம்
மேலும், 2 லட்சத்து 30 ஆசிரியர்கள் மற்றும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியரல்லா பணியாளர்கள் தங்களுடைய குறைகள், புகார்களை தெரிவிக்கும் வகையில் இணையதளம் மற்றும் செயலி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியும் சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று நடந்தது. வெளிப்படைத் தன்மையுடன் இவையனைத்தும் செய்யப்படவேண்டும் என்ற நோக்கில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
தற்போது புதிதாக தொடங்கப்பட்டு இருக்கும் இணையதளம் மற்றும் செயலி மூலம் வரும் புகார்களை அடையாளம் கண்டு, முதன்மை கல்வி அலுவலர் மூலம் என்னென்ன புகார்கள் சரிசெய்யப்பட்டன என்பதை தெரிந்து கொள்ள முடியும். அவர்களால் சரிசெய்ய முடியாத புகார்கள், குறைகள் இயக்குனர் வசம் எவ்வளவு இருக்கிறது? அதேபோல், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் வசம் எவ்வளவு உள்ளது? என்பதை அறிந்து கொள்ளலாம். ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்களின் கோரிக்கைகள் இந்த இணையதளம், செயலி மூலம் தீர்த்து வைக்கப்படும்.
பொதுத்தேர்வு அட்டவணை
நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது. அதேபோல், போட்டித்தேர்வுகளும் நடத்தப்பட உள்ளது. அதற்கேற்றாற்போல், பொதுத்தேர்வு அட்டவணை தயாரிப்பது குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி முடிந்ததும், பொதுத்தேர்வு உள்ளிட்ட அனைத்து தேர்வுகள் தொடர்பான அட்டவணை அறிவிப்பு வெளியிடப்படும். ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் உள்பட அதற்கான பணிகள் பள்ளிகளில் செப்டம்பர் மாதத்தில் இருந்து நடந்து வருகிறது.
மாற்று ஏற்பாடு
‘டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக என்னிடம் பேசினார்கள். ஆர்ப்பாட்டம், போராட்டம் உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக நடத்துகிறீர்கள். கோர்ட்டில் இருந்து இன்னும் ஆசிரியர் பணியிடங்களை ஏன் நிரப்பாமல் வைத்திருக்கிறீர்கள்? என்ற கேள்வி வருகிறது. 2013 டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஒரு பக்கம் கோரிக்கை வைக்கிறர்கள்.
2014, 2017, 2019, 2022-ல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் காத்திருக்கிறார்கள். அவர்கள் ஒரு பக்கம் அழுத்தம் கொடுக்கிறார்கள். இதையெல்லாம் ஆலோசனை செய்து, அதற்கு தகுந்தாற்போல், மாற்று ஏற்பாடு என்ன செய்ய முடியும்? என்பதற்கான சில வழிமுறைகளை முதன்மை செயலாளரிடம் முன்வைத்துள்ளோம். இதற்கு இடைப்பட்ட காலத்தில் தான் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் அலுவலகம் வாயிலாக எங்கள் மாற்று ஏற்பாடுகளை சொல்ல இருக்கிறோம்.
இந்த மாற்று ஏற்பாடு அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் இருக்கவேண்டும். அதற்கேற்ப முடிவெடுத்து அறிவிப்புகள் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment