மாற்றுத்திறனாளி மாணவர்களை ஊக்குவித்து மகிழ்விக்க சுற்றுலா! - துளிர்கல்வி

Latest

Search This Site

Sunday, November 26, 2023

மாற்றுத்திறனாளி மாணவர்களை ஊக்குவித்து மகிழ்விக்க சுற்றுலா!


மாற்றுத்திறனாளி மாணவர்களை ஊக்குவித்து மகிழ்விக்க சுற்றுலா மாற்றுத்திறனாளி மாணவர்களை ஊக்குவித்து மகிழ்விக்கும் வகையில் அவர்களுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 29-ந்தேதி (புதன்கிழமை) கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். 

  மாற்றுத்திறனாளி மாணவர்கள் 

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3-ந்தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க சிறப்பு பள்ளிகளில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களை ஊக்குவித்து, அவர்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடப்பாண்டில் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன. அதன்படி, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படும் அரசு பள்ளிகளில் படிக்கும் பார்வை, செவி மற்றும் அறிவுசார் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 189 பேர் மெட்ரோ ரெயிலில் பயணிக்கும் அனுபவத்தினை பெறும் வகையில், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் உதவியுடன் நாளை (திங்கட்கிழமை) காலை 11.30 மணியளவில் எழும்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை விமான நிலையம் மெட்ரோ ரெயில் நிலையம் வரை சென்று மீண்டும் திரும்பும் வகையில் பயண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

சுற்றுலா அன்றைய தினம் மாலை 3.30 மணிக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மேற்சொன்ன மாவட்டங்களில் இருந்து அந்த சிறப்பு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பான அனுபவம் அளிக்கும் வகையில், சென்னை ராயப்பேட்டையில் அமைந்து உள்ள தனியார் திரையரங்கில் திரைப்படக் காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இதனைத்தொடர்ந்து வருகிற 29-ந்தேதி (புதன்கிழமை) சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்ட சிறப்பு பள்ளிகளில் படிக்கும் 58 மாற்றுத்திறனாளி மாணவர்கள் மாமல்லபுரம் சுற்றுலா தலத்தினை புதிய வால்வோ சிறப்பு பஸ்சில் பயணித்து, கண்டுகளிக்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். இத்தகைய பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலமாக சிறப்பு பள்ளி மாணவர்கள் மிகவும் தன்னம்பிக்கை பெற்று உற்சாகம் அடைவதுடன், அவர்களது சமவாய்ப்பு மற்றும் சமூகத்துடனான முழு பங்கேற்பு ஆகியவை உறுதி செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment