குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், உதவி ஆய்வாளர், சார் பதிவாளர் நிலை-2, சிறப்பு உதவியாளர், தனிப்பிரிவு உதவியாளர், நகராட்சி ஆணையர் நிலை-2, முதுநிலை ஆய்வாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் ஆகியவற்றில் வரும் 5 ஆயிரத்து 446 பணியிடங்களுக்கு முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு மே மாதம் நடந்தது.
அதனைத் தொடர்ந்து முதல்நிலைத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி நடத்தி முடிக்கப்பட்டது.
தேர்வு முடிந்த சில மாதங்களில் தேர்வு முடிவு வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், முடிவு வெளியிடப்படாமலேயே இருந்து வருகிறது. இதனால் தேர்வை எழுதி காத்திருக்கும் தேர்வர்கள் எப்போது தான் தேர்வு முடிவு வெளியாகும் என்ற ஏக்கத்தில் காத்து இருக்கின்றனர்.
சமீபத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு, தேர்வு எழுதியவர்களின் மதிப்பீட்டு பணிகள் விரைவாக நடந்து வருவதாகவும், டிசம்பர் முதல் வாரத்தில் முடிக்கப்பட்டு, பணி நியமன ஆணைகள் முதல்-அமைச்சரால் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் டிசம்பர் மாதம் ஆரம்பித்து 2-வது வாரத்தையும் கடந்த நிலையில் குரூப்-2, 2ஏ தேர்வு முடிவு வெளியாகவில்லை.
இந்த நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இதுதொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ‘தேர்வு முடிவு விரைவில் வெளியாகும்' என்று கூறினார். மேலும், தேர்வு முடிவு தாமதத்துக்கான காரணத்தை டி.என்.பி.எஸ்.சி. தெரிவிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment