ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வத்தலக்குண்டுவில் அரசு மேல்நிலைப்பள்ளி தொடங்கப்பட்டது. ஆங்கில எழுத்து ‘எச்’ வடிவில் இப்பள்ளியின் கட்டிடடம் இருப்பது கூடுதல் சிறப்பு. நூற்றாண்டு விழா கண்ட இந்த பள்ளியில் மாணவர்கள் மட்டுமே படித்து வந்தனர். அதன்படி தற்போது 300 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
வத்தலக்குண்டுவில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லை என்ற குறைபாடு நீண்டகாலமாக இருந்து வந்தது. எனவே வத்தலக்குண்டு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை இருபாலர் படிக்கும் பள்ளியாக மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதைக்கருத்தில் கொண்டு கடந்த கல்வியாண்டு முதல் வத்தலக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியை இருபாலர் படிக்கும் பள்ளியாக மாற்றப்பட்டது.
ஆனால் இதுபற்றிய தகவல் பொதுமக்களிடம் போய் சேரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாணவிகள் பள்ளியில் சேரவில்லை. 300 மாணவர்கள் படிக்கும் அந்த பள்ளியில், ஒரேயொரு மாணவி மட்டும் சேர்ந்துள்ளார். அந்த மாணவி தற்போது 6-ம் வகுப்பு படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதுதொடர்பாக பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அடுத்த ஆண்டில் அதிகமாக மாணவிகளை சேர்க்க ஆசிரியர்கள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
No comments:
Post a Comment