பள்ளிக்கல்வித் துறை சார்ந்த நிலுவையில் உள்ள
வழக்குகளுக்கு தீர்வு காண 4 சட்ட வல்லுனர்கள் நியமனம்
பள்ளிக்கல்வித் துறை சார்ந்த நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண 4 சட்ட வல்லுனர்கள் நியமனம் செய்யப்பட இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பொதுக்குழு கூட்டம்
பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாக அரங்கில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவரும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். இதில் பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் குமரகுருபரன், தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
14 உறுப்பினர்கள் தேர்வு
இந்த கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு புதிதாக 14 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவ்வாறு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும், பள்ளிக்கல்வித் துறை சார்ந்த வழக்குகளை கையாள 4 சட்ட வல்லுனர்கள் நியமனம் செய்வது உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது கூறியதாவது:-
சட்ட வல்லுனர்கள் நியமனம்
பள்ளிக்கல்வித் துறையில் நிலுவையில் உள்ள வழக்குகளை கையாளுவதற்கு பல்வேறு கட்டங்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது. இதற்காக நம்மிடம் ஒரே ஒரு சட்ட அலுவலர் மட்டுமே இருக்கிறார்.அந்த சட்ட அலுவலருக்கு உதவியாக சட்ட வரைவு நுட்பம் தெரிந்த 4 பேர் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில் இருந்து ஊதியம் வழங்க அனுமதி வழங்கப்படுகிறது.
வினா வங்கி புத்தகங்கள்
மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழு 5 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டப்படுகிறது. ஒரு பள்ளியின் வளர்ச்சிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினுடைய பங்கீடு முக்கியமானது.
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்காக வினா-வங்கிகள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் வழங்கப்பட்டது. கொரோனா தொற்றுக்கு பிறகு அது தயார் செய்யப்படாமல் இருந்தது. வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து மீண்டும் வினா-வங்கி புத்தகங்கள் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment