9 மற்றும் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு வருகிற 31-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கல்விஉதவித்தொகை
இதுகுறித்து கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அதன்படி 2023-2024-ம் கல்வி ஆண்டில் தமிழகத்தை சேர்ந்த 3,093 மாணவ-மாணவிகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கு https://scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்திற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 31-ந் தேதி ஆகும். விண்ணப்பங்களை கல்வி நிறுவனங்கள் சரிபார்க்க கடைசி நாள் ஜனவரி 15-ந் தேதி ஆகும்.
புதுப்பித்தல்
இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவிகள் தேசிய உதவித்தொகை இணைய தளத்தில் (National Scholarship Portal) Renewal Application என்ற இணையத்தில் சென்று அப்போதைய விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை பதிவு செய்து 2023-2024-ம் ஆண்டிற்கான விண்ணப்பத்தினை புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இணையதளத்தில் பதிவு
இந்த திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு, அவர்கள் 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும். எனவே 60 சதவீதம் மற்றும் அதற்கும் கூடுதலாக 8 மற்றும் 10-ம் வகுப்புகளில் மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் (National ScholarshipPortal) New Registration என்ற இணையத்தில் சென்று தங்களது விவரங்களை பதிவுசெய்ய வேண்டும்.
இதற்காக பெறப்படும் விண்ணப்ப எண் மற்றும் கடவுச் சொல் பதிவுகளை FreshApplication என்ற இணைப்பின்கீழ் பதிவுசெய்து உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து இத்திட்டத்தின்கீழ் பயனடையுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இதுதொடர்பான விவரங்களுக்கு https://scholarships.gov.in மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (https://socialjustice.gov.in) அணுகி கல்வி உதவித் தொகை தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment