மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “ஐ ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பதவிகளுக்கு மத்திய அரசின் பணியாளர்கள் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) தேர்வு நடத்துகிறது. இந்த தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதியளித்தாலும், கேள்வித்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வழங்கப்படுகின்றன.
இதனால் வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எனவே, அரசியல் சாசனத்தின் 8-வது அட்டவணையில் உள்ள 22 மாநில மொழிகளிலும் இந்த தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, யு.பி.எஸ்.சி. சார்பில், சிவில் சர்வீசஸ் உள்பட அனைத்து தேர்வுகளும் விதிகளின் அடிப்படையில்தான் நடத்தப்படுகின்றன.
இந்த வழக்கில், தேர்வாணையத்தின் கருத்துகள் இன்னும் கிடைக்காததால், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்'' என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘‘சிவில் சர்வீசஸ் தேர்வுகளை அனைத்து மாநில மொழிகளில் எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளபோது, அந்தந்த மாநில மொழியில் கேள்வித்தாளை தயாரித்து வழங்கலாமே? ஏன் அவ்வாறு வழங்குவது இல்லை?'' என்று கேள்வி எழுப்பினர். பின்னர், விசாரணையை ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.
No comments:
Post a Comment