தொடக்கக் கல்வித் துறையின் கீழ் வரும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதில் சில சிக்கல்கள் நீடித்து வந்தன.
இதனை மாற்றி அமைக்கக் கோரி பட்டதாரி ஆசிரியர்கள் சார்பில் அரசுக்கு பலமுறை கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதாவது, பள்ளிக்கல்வித் துறையில் வரும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு என்பது மாநில முன்னுரிமை நடைமுறையில் வழங்கப்பட்டு வருகிறது.
அதே நடைமுறையை தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பின்பற்ற வேண்டும் என்பதுதான் அவர்களின் கோரிக்கையாக இருந்தன. ஏற்கனவே இவர்களுக்கு வட்டார அளவில் முன்னுரிமை அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பட்டதாரி ஆசிரியர்கள் முன்வைத்த இந்த கோரிக்கை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சரின் ஆணைப்படி, பள்ளிக்கல்வித் துறை சார்பில் நேற்று அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது.
இந்த அரசாணையை பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன் வெளியிட்டுள்ளார்.
அதில், 'உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை இருப்பது போலவே, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் இனிவரும் காலங்களில் மாநில முன்னுரிமை அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்படும் என்றும், வருகிற 31-ந்தேதி முதல் இது நடைமுறைக்கு வருகிறது' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment