அரசு கலைக்கல்லூரிகளில் உள்ள 4 ஆயிரம் உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய ஆண்டு அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை (டி.என்.பி.எஸ்.சி.) போல ஆசிரியர் தேர்வு வாரியம், பள்ளிக்கல்வி, கல்லூரிக் கல்வித் துறைகளின் கீழ் காலியாக இருக்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட சில பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு, அதற்கான தேர்வு களை நடத்தி தகுதியானவர்களை நியமனம் செய்து வருகிறது.
அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில், அந்த ஆண்டில் எந்தெந்த பணியிடங்களில் காலியிடங்கள் எவ்வளவு இருக்கின்றன? அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும்? தேர்வு எப்போது நடத்தப்படும்? ஆகியவை அடங்கிய ஆண்டு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு, அதன் அடிப்படையில் நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
4 ஆயிரம் உதவி பேராசிரியர்கள்
அதன்படி, 2024-ம் ஆண்டுக்கான உத்தேச ஆண்டு அட்டவணையை www.trb.tn.gov.in என்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் நேற்று வெளியிட்டு இருக்கிறது. அதில் உள்ள அறிவிப்புகளின் விவரம் வருமாறு:-
* 1,766 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு இந்த மாதம் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடத்தப்பட உள்ளது.
* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்லூரி கல்வியியல் ஆகியவற்றில் 4 ஆயிரம் உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும்.
* தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள்-1, தாள்-2 ஆகியவற்றுக்கான அறிவிப்பு ஏப்ரலில் வெளியாகிறது. தேர்வு ஜூலை மாதம் நடத்தப்பட இருக்கிறது.
முதுநிலை உதவியாளர், விரிவுரையாளர்கள்...
* 200 முதுநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு மே மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆகஸ்டு மாதத்தில் தேர்வு நடத்தப்படும்.
* முதல்-அமைச்சர் கூட்டுறவு ஆராய்ச்சியாளர் பணியிடங்களில் உள்ள 120 இடங்களுக்கு ஜூன் மாதம் அறிவிப்பாணை வெளியாகிறது. செப்டம்பரில் அதற்கான தேர்வு நடத்தப்படுகிறது.
* மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலில் 26 மூத்த விரிவுரையாளர்கள், 103 விரிவுரையாளர்கள், 10 இளநிலை விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கு செப்டம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, டிசம்பரில் தேர்வு நடத்தப்பட உள்ளது.
* அரசு சட்டக்கல்லூரியில் உள்ள 56 உதவி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு நவம்பரில் அறிவிப்பாணை வெளியிடப்படுகிறது. தேர்வை பொறுத்தவரையில், அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி மாதம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு அந்த அட்டவணையில் கூறப்பட்டுள்ளது.
தேர்வர்கள் அதிருப்தி
இதேபோல் கடந்த ஆண்டு (2023) வெளியிடப்பட்ட ஆண்டு அட்டவணையில் 9 அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் ஒரே ஒரு தேர்வு மட்டுமே நடத்தப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், கடந்த ஆண்டு அறிவிப்பில் இடம்பெற்றிருந்த இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் தற்போதும் இடம்பெற்றுள்ளன. அப்போது 6 ஆயிரத்து 553 இடங்கள் என்று குறிப்பிட்ட நிலையில், தற்போது அதை 1,766 ஆக குறைத்து உள்ளனர்.
இதுபோல் பிற பணியிடங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. மேலும் கடந்த ஆண்டு இடம்பெற்றிருந்த அரசு என்ஜினீயரிங் உதவி பேராசிரியர், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்புகள் இடம்பெறவில்லை. இதனால் தேர்வர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
No comments:
Post a Comment