மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த பாடங்களை கற்பிக்கும் ‘டீல்ஸ்’ திட்டம் - துளிர்கல்வி

Latest

Search This Site

Friday, January 12, 2024

மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த பாடங்களை கற்பிக்கும் ‘டீல்ஸ்’ திட்டம்

மைக்ரோசாப்ட்' நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த பாடங்களை கற்பிக்கும் ‘டீல்ஸ்’ திட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் சென்னை, ஜன.12- ‘மைக்ரோசாப்ட்' நிறுவனத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு சார்ந்த பாடங்களை கற்பிக்கும், தொழில்நுட்ப கல்வி மற்றும் கற்றல் ஆதரவு திட்டத்தை (டீல்ஸ்) அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 
‘டீல்ஸ்’ திட்டம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த எந்திர கற்றல், ‘சாட் ஜிபிடி’ உள்ளிட்ட டிஜிட்டல் திறன்களை வளர்த்து கொள்வதற்கு ஏதுவாக ‘மைக்ரோசாப்ட்' நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறை புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சமீபத்தில் மேற்கொண்டது. தொழில்நுட்ப கல்வி மற்றும் கற்றல் ஆதரவு திட்டம் (டீல்ஸ்) என்ற பெயரில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இந்த திட்டம் முதலில் 14 பள்ளிகளில் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது 100 பள்ளிகளுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன், ‘நிர்மான்' அணியின் இணை தலைமை செயல் அதிகாரி உமா கேசனி, அமெரிக்காவின் மைக்ரோசாப் நிறுவன தகவல் மற்றும் செயற்கை நுண்ணறிவு பிரிவு இயக்குனர் செசில் எம்.சுந்தர், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி உறுப்பினர் செயலர் ஆர்.சுதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

தனித்திறன்கள் நிகழ்ச்சியில் ‘டீல்ஸ்' திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு அரசு பள்ளி மாணவர்களும், அவர்களின் வளர்ச்சியும் தான் எடுத்துக்காட்டாகவும், சான்றாகவும் இருக்கிறது. திராவிட மாடல் அரசு, கல்வியில் பல சாதனைகளை செய்திருக்கிறது. முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர், பள்ளிக்கல்வியில் கணினி அறிவியல் பாடத்தை அறிமுகம் செய்தார். தகவல் தொழில்நுட்பப்புரட்சிக்கு வித்திட்டவர் முத்தமிழறிஞர் கலைஞர். தற்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், பல சாதனைகளை செய்துவருகிறார். பள்ளி வகுப்பறைகள், இன்று ‘ஸ்மார்ட்' வகுப்பறைகளாக உருமாற்றம் அடைந்திருக்கிறது. பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் ஒவ்வொருவரையும், அவரவர் திறன்களைக் கண்டறிந்து, அவர்களை உயர்கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் முதன்மையானவர்களாக மாற்றும் வகையில் நான் முதல்வன் திட்டத்தை நம் அரசு செயல்படுத்தி வருகிறது. நமது ஆசிரியர்களே, நமது எதிர்காலத்தை வடிவமைப்பவர்கள். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ஒவ்வொரு மாணவருக்குள் இருக்கும் தனித்திறன்களை கண்டறிந்து, அதற்கேற்ப அந்த மாணவர்களை செதுக்கும் வேலையை ஆசிரியர்கள் செய்து வருகின்றனர். 

பாலம் ‘மைக்ரோசாப்ட்' உள்ளிட்ட தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, மாணவர்களை அவரவர் திறன்களுக்கு ஏற்றவாறு, அவர்களின் எதிர்காலத்தை கட்டமைத்து வருகிறோம். கல்வியில் புதுமைகளை புகுத்தி, புதுமையான செயல்களை செய்து, கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் தமிழக மாணவர்கள் சிறந்து விளங்குகின்றனர். தொழில்நுட்பம், புதுமைகளை உருவாக்குவதிற்கும், வளர்ச்சிக்கும் ஒரு பாலமாக விளங்குகிறது. மாணவர்கள், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை அறிந்து, நவீன தொழில்நுட்பங்களுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். ஆசிரியர்களும், மாணவர்களை தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்றவாறு தயார்ப்படுத்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 

 ஈடாக முடியாது அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, “தமிழ்நாட்டின் கல்வித்துறையை பொறுத்தவரை எந்த அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்தாலும் கரும்பலகை முன் நின்று பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு ஈடாக முடியாது. படிப்பில் மாணவர்கள் தங்களுடைய கவனத்தை செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இதில் அரசு, தனியார் பள்ளிகள் என்ற பாகுபாடு இல்லை. அனைவருக்கும் கல்வி அறிவை தருவதுதான் அரசின் கடமை” என்றார். 

முன்னணியில் மாணவர்கள் நிகழ்ச்சி முடிந்ததும் ‘மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் அதிகாரி செசில் சுந்தர் கூறும் போது, “இது ஒரு நல்ல முன்னெடுப்பு, எதிர்காலத்தில் 2 கோடி முதல் 3½ கோடி வரையிலான வேலைவாய்ப்புகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இருக்கும். அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வேலைவாய்ப்புகள் பெருகியிருக்கும். வெளிநாடுகளில்கூட செயற்கை நுண்ணறிவு சார்ந்த வேலைவாய்ப்புகள் தொடர்பான புரிதல் அனைவருக்கும் ஏற்படவில்லை. நம் அதை நேரடியாக மாணவர்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பதால், எதிர்காலத்தில் வேலைவாய்ப்புகளில் நம் மாணவர்கள் முன்னணியில் இருப்பார்கள். இதனால் முதலீடுகளும், தொழில்வளர்ச்சியும் பெருகும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியும் அதிகரிக்கும்'' என்றார்.

No comments:

Post a Comment