ஆழ்ந்த தூக்கம் அவசியம்; அதிகமாக ‘ரீல்ஸ்’ பார்க்காதீர்கள் மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை - துளிர்கல்வி

Latest

Search This Site

Tuesday, January 30, 2024

ஆழ்ந்த தூக்கம் அவசியம்; அதிகமாக ‘ரீல்ஸ்’ பார்க்காதீர்கள் மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை

மாணவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம் அவசியம். அதிகமாக ‘ரீல்ஸ்’ பார்க்காதீர்கள் என்று பிரதமர் மோடி கூறினார். 


மாணவர்களுடன் உரையாடல் 

 பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு தேர்வு பயத்தை போக்கி, தன்னம்பிக்கை ஊட்டும் முயற்சியாக ‘பரிக்ஷா பே சார்ச்சா’ (தேர்வும், தெளிவும்) என்ற நிகழ்ச்சியை பிரதமர் மோடி 2018-ம் ஆண்டில் இருந்து நடத்தி வருகிறார். நேற்று இதன் 7-வது ஆண்டு நிகழ்ச்சி, டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்தது. இதில் பங்கேற்க இணையதளத்தில் 2 கோடியே 26 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில் மாநிலம் வாரியாக நூற்றுக்கணக்கானோர் நேரடியாக பாரத் மண்டபத்தில் பங்கேற்றனர். மற்றவர்கள் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர். 

அழுத்தங்கள் 

 நிகழ்ச்சியில், தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோருடன் பிரதமர் மோடி உரையாடினார். அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். 

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- 

மாணவர்கள் எத்தகைய அழுத்தங்களையும் தாங்கிக்கொள்ளும் திறனை பெற வேண்டும். சுவிட்சை அணைத்தவுடன் அழுத்தம் மறைந்து விடாது. அழுத்தங்களை சமாளிக்க உதவும் வகையில், தங்கள் குழந்தைகளுக்கு மீண்டெழும் திறனை பெற்றோர் ஊட்ட வேண்டும். நல்ல புத்திக்கூர்மையுள்ள, கடின உழைப்பாளிகளை மாணவர்கள் தங்களது நண்பர்களாக்கி கொள்ள வேண்டும். அவர்களிடம் நீங்கள் உத்வேகம் பெறலாம். படிப்பு மற்றும் தேர்வு தொடர்பான அழுத்தங்கள் உங்களை மூழ்கடிக்க செய்து விடாதீர்கள். போட்டியும், சவால்களும் உத்வேகமாக இருக்க வேண்டும். ஆனால், போட்டி ஆரோக்கியமாக இருக்க வேண்டும். 

ரிப்போர்ட் கார்டு 

சில பெற்றோர் தங்கள் வாழ்க்கையில் வெற்றிகரமாக செயல்பட்டிருக்க மாட்டார்கள். உலகத்துக்கு சொல்ல அவர்களிடம் சாதனை ஒன்றும் இருக்காது. யாரையாவது பார்த்தால், தங்கள் குழந்தைகளின் சாதனைகளைத்தான் சொல்வார்கள். இப்படி தங்களது குழந்தைகளின் ‘ரிப்போர்ட்’ கார்டை தங்களது ‘விசிட்டிங்’ கார்டாக பயன்படுத்திக்கொள்ளக்கூடாது. அதுபோல், நிறைய பெற்றோர் தங்கள் குழந்தைகளை பிற குழந்தைகளுடன் ஒப்பிடுவார்கள். அது குழந்தைகளின் எதிர்காலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதையெல்லாம் பெற்றோர் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் தங்களை மற்றவர்களுக்கு போட்டியாக கருதக்கூடாது. உங்களுக்கு நீங்கள்தான் போட்டி. 

சவால்களுக்கு தீர்வு 

மாணவர்கள், சக மாணவர்களாலும், பெற்றோராலும், தங்களாலும் 3 விதமான அழுத்தங்களை சந்திக்கிறார்கள். அழுத்தங்களை சுமக்கும்போது, அவர்கள் எதிர்பார்த்தபடி செயல்பட முடியாது. தேர்வுக்கு தயாராகும்போது உங்களுக்கு நீங்களே சிறிய இலக்குகளை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். படிப்படியாக உங்கள் செயல்திறனை முன்னேற்ற வேண்டும். அப்படி செய்தால், தேர்வுக்கு முன்பு முழுமையாக தயாராகி விடுவீர்கள். எந்த அழுத்தத்தையும் சமாளிக்க தயாராக வேண்டும். குளிரான இடத்துக்கு செல்லும்போது, அதற்கேற்ப நம்மை மாற்றிக்கொள்வது போல், தேர்வுக்கும் தயாராக வேண்டும். மாணவர்களின் சவால்களுக்கு ஆசிரியர்களும், பெற்றோரும் கூட்டாக தீர்வுகாண வேண்டும். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையிலான பிணைப்பு, எதிர்காலத்துக்கு அடித்தளமாக இருக்க வேண்டும். முதல் நாளில் இருந்தே நல்லுறவை உருவாக்க தொடங்கினால், தேர்வின்போது பதற்றம் இருக்காது. பாடத்திட்டத்துக்கு அப்பாலும் மாணவர்களுடன் ஆசிரியர்கள் தொடர்பை விரிவுபடுத்த வேண்டும். 

30 விநாடிகளில் தூங்கி விடுவேன் 

படிப்பையும், உடல்நலத்தையும் சமச்சீராக பராமரிக்க வேண்டும். சில மாணவர்கள், செல்போனை மணிக்கணக்காக பயன்படுத்துகிறார்கள். தூங்கும் நேரத்தில் ‘ரீல்ஸ்’ பார்க்கிறார்கள். செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வதுபோல், நமது உடம்புக்கும் ரீசார்ஜ் தேவைப்படுகிறது. ஆரோக்கியமான உடல்நிலைக்கு ஆழ்ந்த தூக்கம் அவசியம். எனவே, ‘ரீல்ஸ்’ பார்க்க தூங்கும் நேரத்தை பயன்படுத்தாதீர்கள். நான் வருடத்தின் 365 நாட்களிலும் படுக்கையில் படுத்த 30 விநாடிகளில் ஆழ்ந்து தூங்கி விடுவேன். தூங்கி எழும்போது முழுமையாக எழுவேன். தூங்கும்போதும் முழுமையாக தூங்குவேன். நமது உடலுக்கு போதிய ஊட்டச்சத்தும் அவசியம். உணவு, அன்றாட உடற்பயிற்சி ஆகியவை முக்கியம். செல்போன், லேப்டாப் வந்த பிறகு நிறைய குழந்தைகள் எழுதும் பழக்கத்தையே இழந்து விட்டனர். படிக்கும் நேரத்தில் 50 சதவீதத்தை எழுதி பழகுவதற்கு ஒதுக்க வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பவர்கள் மாணவர்கள். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment