அண்ணா பல்கலைக்கழகத்தின் ‘டான்செட், சீட்டா’ நுழைவுத்தேர்வு மார்ச் மாதம் 9, 10-ந் தேதிகளில் நடைபெறுகிறது.
முதுநிலை பட்டப்படிப்பு
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்வில் (டான்செட்) தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
அதேபோல் அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகள், மண்டல கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் உள்ள எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க். ஆகிய முதுநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேர பொது என்ஜினீயரிங் நுழைவுத்தேர்வு (சீட்டா) தேர்ச்சி பெற வேண்டும்.
அந்த வகையில், 2024-25-ம் கல்வியாண்டுக்கான ‘டான்செட்’ நுழைவுத்தேர்வு, மார்ச் மாதம் 9-ந் தேதியும், ‘சீட்டா’ நுழைவுத்தேர்வு மார்ச் மாதம் 10-ந் தேதியும் நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நுழைவுத்தேர்வு
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் ‘டான்செட்’ செயலாளர் ஸ்ரீதரன் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நடப்பாண்டு, எம்.சி.ஏ முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான ‘டான்செட்' தேர்வு மார்ச் மாதம் 9-ந் தேதி காலையும், எம்.பி.ஏ., தேர்வு அன்றைய தினம் மதியமும் நடைபெறுகிறது. எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க்., ஆகிய முதுநிலை என்ஜீனியரிங் பட்டப்படிப்புகளுக்கான ‘சீட்டா' நுழைவுத்தேர்வு மார்ச் 10-ந் தேதி காலை நடைபெறும். இந்த தேர்வுகள் தமிழகத்தின் 14 நகரங்களில் நடக்கும்.
‘டான்செட் மற்றும் சீட்டா’ நுழைவுத்தேர்வுகளுக்கு வருகிற 10-ந் தேதி முதல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ந் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ் இல்லை என்றாலும், ‘டான்செட், சீட்டா’ நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாணவர் சேர்க்கை நடைபெறும்போது மதிப்பெண் சான்றிதழ்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வு முடிவுகள் மார்ச் மாதம் இறுதியில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மே மாதம் நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment