சாலைகளில் நிறைய எலெக்ட்ரிக் வாகனங்களை பார்க்கிறோம். எலெக்ட்ரிக் பைக், எலெக்ட்ரிக் கார், ஏன்..?
எலெக்ட்ரிக் பேருந்து வரை வந்துவிட்டது. நாம் பயணிக்கும் அதே சாலைகளில் இவை சீறிப்பாய்கிறது. இத்தகைய சூழலில், நமக்கும் எலெக்ட்ரிக் வாகனம் வாங்கும் ஆசை வரலாம். ஆனால் ஆசையைவிட, எலெக்ட்ரிக் வண்டி சம்பந்தமான குழப்பங்கள் நிறையவே நம் மனதில் எழும். குறிப்பாக, எதற்காக பேட்டரி வாகனங்களை வாங்க வேண்டும்?, அதை பெட்ரோல்-டீசல் வாகனங்களை போல பயன்படுத்த முடியுமா?, சார்ஜ் செய்வது சுலபமா?, பெட்ரோல்-டீசல் வண்டிகளை விட, எலெக்ட்ரிக் வண்டிகள் லாபமா?, இந்திய பொருளாதாரத்திலும், இளைய தலைமுறையினரின் வேலைவாய்ப்பிலும் முன்னேற்றங்களை கொண்டு வருமா?... போன்ற பல கேள்விகள் நம் மனதிலும் எழுவதுண்டு. அப்படி வழக்கமாக முணுமுணுக்கும் சந்தேக கேள்விகளுக்கு, விளக்கம் இதோ...
ஏன் மாறவேண்டும்?
சுற்றுச்சுழல் பாதுகாப்பு முக்கிய காரணமாக இருந்தாலும், பொருளாதார நெருக்கடியும், எலெக்ட்ரிக்/பேட்டரி வாகனங்களுக்கான தேவையை அதிகப்படுத்தியிருக்கிறது. கச்சா எண்ணெய் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களும், அதன் கொள்முதலில் இருக்கும் சர்வதேச சிக்கல்கள், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு... என பெட்ரோல்-டீசலுக்கு ஏராளமான கெடுபிடிகள் உருவாகியிருப்பதால், இந்திய அரசாங்கம் பேட்டரி வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றன. அதேசமயம், வெப்பமயமாதலை தவிர்க்கும் பார்முலாவாகவும், எலெக்ட்ரிக் வாகனங்கள் கருதப்படுகின்றன.
சாத்தியமா?
சாத்தியமாக்கவேண்டிய முயற்சிதான். இதை சீன மக்கள், சாத்தியமாக்கியிருக்கிறார்கள். அமெரிக்கர்களை விட, இருமடங்கு எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கி, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். உலகளவில் அதிகளவிலான எலெக்ட்ரிக் வாகனங்கள் உலாவருவது சீனாவில்தான். சீனாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்கா, நார்வே, ஜப்பான், இங்கிலாந்து என நாடுகளின் பட்டியல் நீள்கிறது. நாம் இன்றிலிருந்து தொடங்கினால் கூட, 2030-ம் ஆண்டில் எரிபொருளை புறக்கணிக்கும் நாடுகளின் பட்டியலில் இணைந்துவிட முடியும்.
வளரும் நாடான இந்தியாவிற்கு பொருந்துமா?
புதுமைகளை விரும்பும் இந்தியர்களும், எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தியாவில் காட்சிப்படுத்தப்படும் பேட்டரி வாகனங்களையும், சந்தைப்படுத்தப்படும் வண்டிகளையும் ஆர்வமுடன் வாங்கி பயன்படுத்துகிறார்கள். இந்தியாவில் நிலவும் எரி பொருள் விலையேற்றமும், பேட்டரி வாகனங்கள் மீதான வரவேற்பை அதிகப்படுத்துகிறது. சமீபகாலமாக இந்தியாவில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதால், பேட்டரி வாகன திட்டம் வெகுவிரைவிலேயே வெற்றி பெறும்.
மக்களுக்கு லாபமா?
சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கைகளின்படி எலெக்ட்ரிக் வாகனங்கள் பெட்ரோல்-டீசல் வண்டிகளை விட, அதிகளவில் மைலேஜ் தருகின்றன. அதேசமயம், பெட்ரோல்-டீசல் விலை மற்றும் மின்சார விலை, மைலேஜ் விஷயங்களை ஒப்பிட்டு பார்த்தால், எலெக்ட்ரிக் வண்டிகள் லாபகரமானதாகவே தோன்றுகின்றன.
உதாரணத்திற்கு, பெட்ரோல் வாகனம் ஒன்று 5 லிட்டர் பெட்ரோலில், 100 கிலோமீட்டர் ஓடுகிறது என்றால், எலெக்ட்ரிக் வாகனம் 100 கிலோமீட்டர் மைலேஜ் தர, 10 கிலோவாட்ஸ் (10 யூனிட்) மின்சாரமே போதுமானதாக இருக்கிறது. அப்படி என்றால், 5 லிட்டர் பெட்ரோல் விலையையும், 10 யூனிட் மின்சார விலையையும் ஒப்பிட்டு பார்த்தால், குறைந்தது இரண்டு மடங்கு லாபம் கிடைக்கிறது.
மாசு கட்டுப்பாடு உண்மைதானா?
அமெரிக்க அரசு நடத்திய ஆய்வில் மின்சார கார்களுக்கு மின்சாரம் தயாரிக்கும்போது உருவாகும் கார்பன் டை ஆக்சைடு, கச்சா எண்ணெய்யில் இருந்து பெட்ரோல்-டீசல் எடுத்துப் பயன்படுத்தும் ஐ.சி. என்ஜின் கார்களைவிடக் குறைவாகவே இருப்பதாகக் கூறியுள்ளது. அதனால் மாசு கட்டுப்பாடு, குறைக்கப்படுகிறது. இதன்மூலம் ஓசோன் படலத்தின் ஆயுள் காலத்தையும், பூமியில் நிலவும் ஒழுங்கற்ற வெப்பநிலையையும் கட்டுப்படுத்த முடியும்.
நடுவழியில் பேட்டரி தீர்ந்து போனால்?
இது கொஞ்சம் தலைவலியான பிரச்சினைதான். சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில், எலெக்ட்ரிக் வாகனங்களை சார்ஜ் செய்து கொள்ள பெட்ரோல் பங்க் போன்று ஏராளமான சார்ஜிங் பாய்ண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் அங்கு இந்த பிரச்சினை குறைவு. ஆனால் பேட்டரி வாகன பயன்பாட்டிற்கு இந்தியா வளர்ந்து வரும் நாடு என்பதால், இத்தகைய சார்ஜிங் பாய்ண்டுகள் அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு, புனே போன்ற இடங்களில் நிறைய சார்ஜிங் பாய்ண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
அதேசமயம், பேட்டரி நடுவழியில் தீர்ந்து போனால், அதையும் சமாளிக்க சீனர்கள் ஒரு வழியை கண்டுபிடித்திருக்கிறார்கள். அதுதான், ஸ்டெப்னி பேட்டரி. கார்களில் இருக்கும் ஸ்டெப்னி சக்கரங்களை போல, முழுவதும் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை வைத்து கொள்ளும் பழக்கத்தையும் கடைப்பிடிக்கிறார்கள். மேலும் ரோட் அசிஸ்ட் எனப்படும் சாலையோர வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்கள். இத்தகைய வசதிகளை, இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் வெகுவிரைவில் எதிர்பார்க்கலாம்.
புதிய வசதிகள்
ஆரம்பத்தில் ஓரிரு மாடல்களில் மட்டுமே தயாரான எலெக்ட்ரிக் வண்டிகள், இன்று பலவிதமான மாடல்களில் தயாராகின்றன. புதுமையான வசதிகளும் சேர்க்கப்படுகின்றன. குறிப்பாக எலெக்ட்ரிக் பைக்குகளில் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத பல வசதிகளும் புகுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாகவும் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரிக்கக்கூடும்.
அதிக மைலேஜ் எப்படி சாத்தியமாகிறது?
மின்சார வாகனங்களில் மின்சாரம் என்பது எந்திர ஆற்றலாக மாற்றப்படுகிறது. இங்கே, பேட்டரி, மோட்டார், பியூஸ் மற்றும் கண்டக்டர் போன்ற இடங்களில் சில ஆற்றல் வீணாகி நமக்கு 80 சதவிகிதம் எந்திர ஆற்றலாக கிடைக்கும். பெட்ரோல் வாகனங்களை எடுத்துக்கொண்டால் பெட்ரோலில் இருந்து வெறும் 35 சதவிகிதம் மட்டுமே நமக்கும் எந்திர ஆற்றலாக கிடைக்கிறது. அதனால்தான், எலெக்ட்ரிக் வாகனங்களில் இருமடங்கு லைலேஜ் கிடைக்கிறது.
No comments:
Post a Comment